இந்தியாவில் தாக்குதல் நடத்த புலிகளை 'வளைக்கும்' லஷ்கர்-ஐபி எச்சரிக்கை!
மும்பை: இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட விடுதலைப் புலிகள் மற்றும் பப்பர் கல்சா அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்குள் அனுப்ப லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு முயற்சிப்பதாக ஐபி எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான எச்சரிக்கைத் தகவலை மகாராஷ்டிர அரசுக்கும், மும்பை காவல்துறைக்கும் ஐபி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதில், மும்பை நகரின் உள்ளேயும், வெளியேயும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுறுவியிருக்கலாம். குறிப்பாக நவி மும்பை பகுதியில் அவர்கள மறைந்திருக்கலாம். இவர்களைக் கொண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்பு மும்பையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அந்தத் தகவல் தெரிவிக்கிறதாம்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு நேரடியாக இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த முடியாததால், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், சீக்கிய வலதுசாரி அமைப்பான பப்பர்கல்சா அமைப்பையும் பயன்படுத்த முனைவதாகவும் அந்த உளவுத் தகவல் தெரிவிக்கிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் இந்த எச்சரிக்கைத் தகவல் மும்பை காவல்துறைக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாம். இதுகுறித்து ஐபியின் உயர் அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், இப்போதைக்கு இவர்கள் அமைதியான முறையில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களில் இவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்புத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
இதையடுத்து மகாராஷ்டிர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மும்பை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications