கூடங்குளத்தில் மீண்டும் முற்றுகை போராட்டம்: போராட்டக்குழு முடிவு
வள்ளியூர்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்த போராட்டகுழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 3ம் கட்டமாக இடிந்தகரையில் இன்று 77வது நாளாக அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். டிச கடந்த மாதம் 16ம் தேதி 3 நாள் அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் சில நாட்களில் கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கும் என்று அறிவித்தார்.
இது போராட்டக்குழுவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல் அணு உலையில் அணு மின்சாரத்துக்கு தேவையான யுரேனியம் நிரப்பப்பட்டுவிட்டதாக போராட்டக் குழுவினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் முதல் அணுஉலையில் நிரப்பட்டுள்ள யுரேனியத்தை அப்புறப்படுத்த வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் அணுமின் நிலையம் விரைவில் இயங்கும் என்று அறிவித்ததை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்காக போராட்டக் குழுவினர் கடந்த 31ம் தேதி வரை கெடு விதித்திருந்தனர். ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, கூடங்குளம் அணுமின் நிலையம் தரப்பிலோ இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அடுதத கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதில் அணுமின் நிலையத்துக்கு செல்லும் அனைத்து பணியாளர்களையும் தடுத்து மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவது, அதை எந்த வகையில் நடத்துவது, மக்கள் மத்தியில் அணுமின் நிலையம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாகன பேரணிகளை நடத்துவது என பல்வேறு உத்திகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
அணுமின் நிலையத்தை மூடுவது என்ற கருத்தில் சமாதானத்திற்கே இடமில்லை என்று போராட்டக் குழுவினர் உறுதியாக இருப்பதால் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications