'பாமகவுக்கே ஓட்டு போடுவோம்'- குல தெய்வத்திடம் சத்தியம் வாங்க ராமதாஸ் உத்தரவு
சென்னை: கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்களிடம், பாமகவுக்கே ஓட்டுப் போடுவேன் என்று அவர்களது தாய், குழந்தை அல்லது குல தெய்வத்திடம் சத்தியம் வாங்க வேண்டும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட பா.ம.க பொதுக்குழுக் கூட்டதில் பேசிய அவர்,
:பாமக ஆரம்பித்ததே தமிழகத்தை ஆளவேண்டும் என்ற நோக்கத்தில்தான். ஆரம்பத்தில் சரியான பாதையில் சென்ற நாம் பின்னர் திசைமாறி விட்டோம். கொள்கையை விட்டு விட்டோம்.
பாமக ஆரம்பித்த ஐந்து மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து நின்று 7 சதவீத ஓட்டுகள் பெற்றோம். தற்போது நடந்த தேர்தலில் கூட்டணி வைத்து வெறும், 2.15 லட்சம் ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளோம். கூட்டணி வைத்ததால் வந்த பின்னடைவு தான் இது.
1996க்கு பிறகு கூட்டணியில் சென்று விட்டோம். தற்போது, 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஒரு எம்.பி. கூட கிடையாது. கடந்த எம்.பி. தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்திருந்தால், தற்போது சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வந்திருக்கலாம் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் எங்களிடம் கூறுகிறார்கள்.
நாம் அடிக்கடி கூட்டணி மாறுகிறோம் என்று பொதுமக்கள் கிண்டல் செய்தனர். இரண்டு திராவிட கட்சிகளும் நம்மை இழுத்தடித்தனர். எனவே, இனிமேல் திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள், இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கினர். மதுபானம், சினிமா போன்றவற்றை கொடுத்து இளைஞர்களை சீரழித்தனர்.
மக்களின் வாழக்கை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் வறுமையில் உள்ளனர். இந்த நிலை மாற தமிழகத்தில் உழைக்கும் கட்சி பாமக தான்.
எனவே, ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்களையும், ஒரு ஒன்றியத்துக்கு 13 ஆயிரம், நகரத்துக்கு 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். முழுக்க முழுக்க வன்னியர் ஓட்டு வங்கியாக உருவாக்க வேண்டும்.
பாமகவுக்கு வாக்களிப்போம் என தாய் அல்லது குழந்தை அல்லது குல தெய்வம் மீது சத்தியம் வாங்கி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி இழப்பீடு:
இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் தாக்கி 3 நாள்களான பிறகும்கூட பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அறுவடை செய்யும் நிலையிலிருந்த சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் வடியாததால் நெற்பயிர்கள் அழுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர்.
முதல் கட்ட மதிப்பீடுகளின்படி தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி அளவிற்கும், புதுச்சேரியில் ரூ. 2,000 கோடி அளவுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி, உடனடியாக மத்திய அரசு குழுவை வரவழைத்து, புயல் சேதத்தை மதிப்பிடவும், அதனடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு பெறவும் தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு நிதி தரும் வரை காத்திருக்காமல் தமிழக அரசு தன் சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
புதுவையில் குடும்ப அட்டை வைத்திருப்போர் அனைவருக்கும் ரூ.2,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் புயல் பாதித்த பகுதிகளில் அதேபோன்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
புயல் சேதம் குறித்து ஆராய பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சேதம் தொடர்பாக ஆராய்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அளிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications