தூத்துக்குடியில் பெண்களுக்கு 'இச்' கொடுத்த அமெரிக்கர்கள்: நையப்புடைத்த மக்கள்
தூத்துக்குடி: புத்தாண்டையொட்டி மது அருந்திவிட்டு தெருவில் சென்ற பெண்களுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த அமெரிக்கர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ரஸ்ஸல்கே பிரான்சிஸ்(48) மற்றும் ஜான் டக்லஸ்(47). இந்த இருவர் உள்பட 3 பேர் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறு்ததப்பட்டிருந்த சரக்கு கப்பலில் பாதுகாவலர்களாக பணிபுரிகின்றனர். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை வரவேற்க அவர்கள் 3 பேரும் தாங்கள் தங்கியுள்ள ஹோட்டலில் மது அருந்திவிட்டு பாளையங்கோட்டை-தூத்துக்குடி ரோட்டுக்கு சென்றனர். அவர்கள் நடுரோட்டில் நடனம் ஆடிக் கொண்டு அந்த வழியாகச் செல்பவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவி்ததனர். அவர்கள் உற்சாக மிகுதியில் பெண்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் உற்சாகத்தின் உச்சிக்கே சென்ற அந்த 3 பேரும் வடக்கத்திய கலாச்சாரப்படி உள்ளூர் பெண்களுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். முன்னதாக அவர்கள் ஷூ அணிந்து கொண்டு கையில் பீர் பாட்டிலுடன் கோவிலுக்குள் செல்ல முயன்றது அப்பகுதி மக்களை எரிச்சல் அடையச் செய்தது.
இந்நிலையில் அவர்கள் பெண்களுக்கு முத்தம் கொடுப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த 3 பேரில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த 2 அமெரி்க்கர்களையும் மக்களிடம் இருந்து மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தூத்துக்குடி மத்திய காவல் நிலைய வட்டாரங்கள் கூறியதாவது,
ரஸ்ஸல்கே பிரான்சிஸ் மற்றும் ஜான் டக்லஸ் ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த சகோதரர்கள். பெண்களிடம் அத்துமீறி நடந்ததற்காகவும், பிரசன்னவிநாயகர் கோவிலுக்குள் கையில் பீர் பாட்டில், காலில் ஷூவுடன் நுழைய முயன்றதற்காகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஸ்ஸல்கே மற்றும் ஜான் முதலில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாளையங்கோட்டை ரோட்டில் வெளிநாட்டவர்களைத் தாக்கியதற்காக உள்ளூர் நபர்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications