செஞ்சி- கோழி செத்த பிரச்சினையில் 15 இருளர் குடும்பங்களை ஒதுக்கி வைத்த கொடுமை!

செஞ்சி அருகே உள்ள சோமசமுத்திரம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் என்பவருக்கும், அங்குள்ள இருளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கோழி செத்துப் போனது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் இருளர் குடும்பத்தினருடன் பாலகிருஷ்ணன் மோதலில் ஈடுபட்டார். இதுகுறித்து இருளர் சமுதாயத்தினர் போலீஸில் புகார் கொடுத்ததன் பேரில் கடந்த வாரம் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் 15 இருளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஊர்ப் பெரியவர்கள் பஞ்சாயத்தைக் கூட்டிப் பேசி ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உத்தரவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் குடும்பத்தினர் தற்போது கிராமத்தை காலி செய்து மலைப் பகுதியில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், ரேஷன் கார்டுகளையும் அரசிடமே ஒப்படைக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இருளர் சமூகப் பெண்களை போலீஸார் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் மாநிலத்தை உலுக்கிய நிலையில் செஞ்சி பகுதியில் இருளர் சமுதாயக் குடும்பத்தினரை, சாதாரண கோழி செத்தப் பிரச்சினைக்காக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications