பொதுப்பணித்துறை அமைச்சரின் அதிரடி ரெய்டு- மயங்கி விழுந்த பெண் ஊழியர்!

Subscribe to Oneindia Tamil

PWD campus, Chepuak
சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடத்தி வரும் திடீர் ஆய்வுகளால் ஏற்பட்ட பிரஷரால் ஒரு பெண் ஊழியர் மயங்கி விழுந்துள்ளார்.

அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்படுவதற்கு முன்பு வரை பல அமைச்சர்களை அவர்கள் சார்ந்த அலுவலகங்களின் பக்கமே பார்க்க முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு அமைச்சர்களும் திடீர் திடீரென அவர்கள் சார்ந்த தலைமை அலுவலங்களுக்கு அடிக்கடி ஆய்வுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கமும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள அலுவலகங்களுக்கு கடந்த 3 நாட்களாக தினசரி ஆய்வுக்கு வர ஆரம்பித்துள்ளார். காலையிலேயே வந்து விடும் அவர் ஊழியர்களின் வருகை குறித்து தீவிர கவனம் செலுத்துகிறாராம்.

முதல் நாளன்று அவர் ஆய்வுக்கு வந்தபோது தலைமைப் பொறியாளர் உள்பட பலர் உரிய நேரத்தில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வருகைப் பதிவேடு ரெஜிஸ்டரை தூக்கிக் கொண்டு போய் விட்டாராம். அன்று மட்டும் 300 பேருக்கும் மேல்வரவில்லை என்று கூறப்படுகிறது. முதல் நாள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் பாயவில்லை. ஆனால் 2வது நாளும் அவர் சோதனைக்கு வந்துள்ளார். அப்போது சிலர் வரவில்லை என்று தெரிகிறது.

அமைச்சர் வருகையால் பொதுப்பணித்துறை அலுவலகமே பரபரப்பாகியுள்ளது. தொலை தூரங்களிலிருந்து வரும் ஊழியர்கள் அரக்கப் பரக்க ஓடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண் ஊழியர்கள்தான் என்கிறார்கள். காரணம் தாம்பரம், செங்கல்பட்டு என தொலை தூரங்களிலிருந்து வரும் பெண் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனராம்.

இந்த சோதனை குறித்து ஊழியர்களிடையே அதிருப்தியும் மேலோங்கியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அமைச்சர் இப்படி அடிக்கடி தலைமை அலுவலகத்திற்கு வரும்போது தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அனைத்து மூத்த அதிகாரிகளும் அவருடன் நேரத்தை செலவிட நேருகிறது. அப்படி உட்காரும்போது அவர்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் வருகைப் பதிவை அமைச்சர் இவ்வளவு தீவிரமாக பார்ப்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. காரணம், பெரும்பாலான ஊழியர்கள் சற்று லேட்டாக வந்தாலும் கூட காலதாமதமாகத்தான் செல்கிறார்கள். மேலும் தங்களது பணிகளை முடிக்காமல் யாரும் போவதில்லை. விடுமுறை நாட்களிலும் கூட பல ஊழியர்கள் குறிப்பாக பெண்கள் பணிக்கு வருவது இங்கு சகஜம். நேரம்காலம் பார்க்காமல் நாங்கள் வேலை பார்க்கிறோம்.

தவிர்க்க முடியாத காரணத்தால் சிலர் தாமதமாக வர நேரிடும். அப்படிப்பட்டவர்களையும் கடுமையாக எச்சரிக்கும் வகையில் இப்படி நடந்து கொள்வது நியாயமா என்று புலம்புகின்றனர் ஊழியர்கள்.

நேற்று இப்படித்தான் அமைச்சர் வந்து விடுவாரே என்ற பதட்டத்தில் அலுவலகத்திற்கு அடித்துப் பிடித்துக் கொண்டு வந்த ஒரு பெண் ஊழியர் 3 மாடிக் கட்டடத்தில் வேகமாக ஏறி வந்து தனது இருக்கையை நெருங்கியபோது மயக்கம் போட்டு விழுந்து விட்டாராம்.

மேலும் அமைச்சர் வரும்போது யாரும் செல்போனில் பேசாதீர்கள், சீட்களில் உட்காருங்கள், அமைதியாக இருங்கள் என்று ஏதோ எல்கேஜி பிள்ளைகளுக்கு ஹெட்மாஸ்டர் உத்தரவிடுவது போல கூறுகிறார்களாம்.

அமைச்சரின் ஆய்வில் குறை சொல்ல முடியாது. காரணம், தனது துறை அலு்வலங்கள் சிறப்பாக இயங்குகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டியது அமைச்சரின் கடமைதான். அதேசமயம், ஊழியர்களுக்குப் பீதியை ஏற்படுத்தும் வகையில் அமைச்சரின் வருகை அமைவது சரியல்ல என்பது ஊழியர்களின் கருத்தாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ராமலிங்கத்தின் மனைவி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து சென்றாராம். அமைச்சர் வருவது சரி, அமைச்சரின் மனைவி எதற்கு ஆய்வுக்கு வருகிறார் என்றும் புரியாமல் கேட்கிறார்கள் அப்பாவி அரசு ஊழியர்கள்.

சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பட்டியலில் அமைச்சர் கே.வி.ராமலிங்கமும் ஒருவர் என்று ஏற்கனவே பேச்சு அடிபடுகிறது. எனவே முதல்வர் ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டிலிருந்து தனது பெயரை நீக்குவதற்காக இதுபோல அதிரடி ஆய்வுகள் நடத்தி முதல்வர் கவனத்தை அமைச்சர் ஈர்க்க முயல்கிறாரோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+