அழகிரி மகன் சைபர் பார்க்கின் காம்பவுண்டு சுவரை கையகப்படுத்த மாநகராட்சி முடிவு
மதுரை: மதுரையில் மு. க.அழகிரியின் மகன் தயாநிதிக்குச் சொந்தமான தயா சைபர் பார்க்கில் ஆக்கிரமித்து கட்டியுள்ள காம்பவுண்டு சுவரை தன்வசம் எடுத்துக் கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்புப் பலகை விரைவில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான தயா சைபர் பார்க் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டடம் அமைந்துள்ள 1.20 சென்ட் நஞ்சை நிலத்திற்கு, அழகிரி பெயரில் பட்டா உள்ளது. அதேசமயம், வண்டிப்பாதை புறம்போக்கில் 0.08 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளதாக,' புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் சகாயம் உத்தரவின் பேரில் நடந்த விசாரணையில், ஆக்கிரமிப்பு நடைபெற்றது உண்மை என தெரிய வந்துள்ளது.
ஆக்கிரமிப்புக்கு விளக்கம் கேட்டு, தயா சைபர் பார்க் நிர்வாகத்திற்கு அனுப்பிய நோட்டீசிற்கு முறையான பதில் வராததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தயா சைபர் பார்க் நிர்வாகம் ஆக்கிரமிப்பை காலி செய்ய, முன்வராததால், சம்பந்தப்பட்ட இடத்தில் மாநகராட்சியின் அறிவிப்பு பலகையை வைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த மாநகராட்சி அதிகாரி, இந்த வாரத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில், அறிவிப்பு பலகை வைக்கப்படும். சுவரை இடிப்பதற்கு பதிலாக, மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்து உள்ளோம், என்றார்.












Click it and Unblock the Notifications