6 பெண்களை கழுத்தை அறுத்துக் கொன்று நகை கொள்ளை: 3 பேர் கைது
நாமக்கல்: 6 பெண்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த 70 பவுன் தங்க நகைகளும், 2.4 கிலோ வெள்ளிப் பொருட்களும் மீட்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், முல்லை நகரில் விசாலாட்சி(75) என்ற மூதாட்டி, தனது மகள் சத்தியவதி(50), பேத்தி டாக்டர் சிந்து (33) ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி இரவு விசாலாட்சியின் வீட்டிற்குள் புகுந்த சில மர்மநபர்கள் 3 பெண்களின் கை, கால்களையும் கட்டிப்போட்டு கழுத்தை அறுத்தனர். அதன்பிறகு 3 பெண்களும் அணிந்திருந்த 28 பவுன் நகைகளுடன் மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதில் விசாலாட்சியும், சிந்துவும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆனால் படுகாயமடைந்த சத்தியவதி மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார். கடந்த நவம்பர் 14ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கரூரிலும் அதே பாணியில் ஒரு கொலை சம்பவம் நடந்தது.
இதேபோல கரூர் மாவட்டம் வெங்கமேட்டை அடுத்த பூர்ணிமா கார்டனில் வசித்த வந்தவர் கல்யாணி(52). அவரது மகள் கலையரசி(24), கருணிகா(5). இவர்கள் 3 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்மநபர்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேற்கண்ட 2 கூட்டுக் கொலை சம்பவங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்ததால், தனிப்படை போலீசார் இது குறித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பரமத்தி வேலூர் குப்புச்சிபாளையத்தை அடுத்த காமாட்சி நகரை சேர்ந்த இளங்கோவன்(27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையி்ல், நாமக்கல் மற்றும் கரூரில் நடந்த கொலை சம்பவங்களுக்கு அவர் திட்டம் தீட்டிக் கொடுத்தது தெரிய வந்தது.
மேலும் இளங்கோவன் சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியைச் சேர்ந்த சந்தானம்(23), வேலூர் மாவட்டம் பழைய வாணியம்பாடியைச் சேர்ந்த காமராஜ்(32) உள்ளிட்ட 2 பேருக்கும் கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் அளித்த தகவலின் பேரில் கரூரில் கொள்ளையடிக்கப்பட்ட 42 பவுன், நாமக்கலில் கொள்ளையடிக்கப்பட்ட 28 பவுன் என்று மொத்தம் 70 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரின் வீட்டில் சந்தானம், காமராஜ் உள்ளிட்ட 2 பேரும் சேர்ந்து திருடிய 2.4 கிலோ வெள்ளிப் பொருட்களையும் போலீசார் மீட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications