'சசிப் பெயர்ச்சிக்கு' பின்னர் முதல் முறையாக 4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்

ஜெயலலிதா முதல்வரான பின்னர் நடைபெறும் 5வது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.
முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைப்படி ஆளுநர் கே.ரோசய்யா இதற்கான அறிவிப்பினை புதன்கிழமை வெளியிட்டார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு:
'அக்ரி' இனி பள்ளிக் கல்வி அமைச்சர்
வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வணிக வரி அமைச்சரானார் சி.வி.சண்முகம்
பள்ளிக் கல்வி மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சி.வி.சண்முகத்திற்கு, வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே வகித்து வந்த சட்டம், நீதிமன்றங்கள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆகியன அவர் வசமே தொடர்ந்து இருக்கும்.
வருவாய்த்துறைக்கு வேலுமணி மாற்றம்
தொழில் துறை, கனிம வளம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கமணிக்கு தொழில்துறை
வருவாய்த் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பி.தங்கமணிக்கு தொழில் துறை, கனிமவளம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை விட்டு சசிகலா நீக்கப்பட்ட போது அவரது ஆதரவு அமைச்சர்களும் அடியோடு நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் எந்த மாற்றமும் வரவில்லை. அதேசமயம், 15 அமைச்சர்களின் லிஸ்ட் முதல்வர் கையில் இருப்பதாக இன்று வரை பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் தற்போது நான்கு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஜெயலலிதா முதல்வரான பின்னர் நடைபெறும் 5வது அமைச்சரவை மாற்றம் இது.
புதிய அமைச்சர்கள் இனி இப்படி அழைக்கப்படுவார்கள். சி.வி.சண்முகம் - வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர். அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி - பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர். எஸ்.பி.வேலுமணி - வருவாய்த் துறை அமைச்சர். பி.தங்கமணி - தொழில் துறை, சிறப்பு முயற்சிகள் துறை அமைச்சர்.
இனி புதிய அமைச்சர்கள் மாற்றம், இலாகா மாற்றம் எப்போது என்பது தெரியவில்லை. இருப்பினும் பட்ஜெட்டுக்கு முன்பாக மாற்றம் இருக்கலாம் என்ர எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications