நெல்லையில் ரூ.1.5 கோடி நிலம் மோசடி: 7 பேர் மீது வழக்கு
நெல்லை: நெல்லையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மிட்டாதார் குளத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவருடன் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த மயின்குட்டி மற்றும் 5 பேர் சேர்ந்து கருங்குளத்தில் 18 அரை ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். இந்த நிலத்தை கேரள நண்பர்களுக்கு தெரியாமல் அவர்கள் பெயரில் போலி கையெழுத்து போட்டு தனது மனைவிக்கு மைக்கேல்ராஜ் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
பின்னர் இந்த நிலத்தை கேரளாவைச் சேர்ந்த மற்றொருவருக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும். வெளிநாட்டில் இருந்து திரும்பிய மயின்குட்டியும், அவர்களது நண்பர்களும் கோட்டை கருங்குளத்தில் தாங்கள் வாங்கிய நிலத்தை சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த நிலத்தை வேறொருவர் அனுபவித்து வந்தது தெரிய வந்தது. மேலும் மைக்கேல்ராஜும் தற்போது இறந்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மயின்குட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரியிடம் புகார் செய்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்ய மனு அளித்தார். இதையடுத்து நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மைக்கேல் ராஜ், அவரது மனைவி இந்திரா, ஜார்ஜ், இந்திரா கோபாலகிருஷ்ணன், சங்கரலிங்கம், கோபாலகிருஷ்ணன், மெகுஷா பானு ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications