மின்தடை: சென்னையில் டார்ச்லைட் கொடுத்து காங்கிரஸார் நூதன பிரசாரம்
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரும் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது.எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸார் வீடு வீடாக சென்று டார்ச் லைட் கொடுத்து அணு மின் நிலையத்திற்கு ஆதரவு திரட்டினர்.
உதயக்குமார் தலைமையில் கூடங்குளத்தில் சிலர் அணு மின் நிலையத்திற்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதைப் போல அணு மின் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்றும் தற்போது போராட்டங்கள் வலுத்துள்ளன. குறிப்பாக காங்கிரஸார் தீவிரமாக போராடி வருகின்றனர்.
தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறை பிரச்சனையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிவருவதால் இத்தகைய சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியம் தேவை, அவற்றை உடனே திறக்க வேண்டும் அதனால் பாதிப்பு இல்லை, பாதுகாப்பானது என்று மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலைய அவசியத்தை வலியுறுத்தி சென்னை பெரம்பூரில் காங்கிரசார் நூதன பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டனர். வட சென்னை காங்கிரஸ் பிரமுகர் வி.எஸ்.ஜெ.தினகரன் தலைமையில் வீடு வீடாக சென்று, அணுமின் நிலையம் திறக்கவில்லை என்றால் இருளில் கிடப்போம் என்று கூறி டார்ச் லைட் கொடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரம் செய்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் ஆலோசனையின் பேரில்தான் இந்த லைட் கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications