கொள்ளையடித்த ஒரே மாதத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான வங்கிக் கொள்ளையர்கள்
சென்னை: கடந்த மாதம் 23ம் தேதி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல் சரியாக ஒரே மாதத்தில் அதாவது பிப்ரவரி 23ம் தேதி சுட்டு வீழத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி 23ம் தேதி சென்னை பெருங்குடி, ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்குள் பிற்பகலில் கூட்டமே இல்லாத நேரத்தில் புகுந்து, துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் ரூ. 20 லட்சம் பணத்தை அள்ளிச் சென்றது.
வங்கியில் கண்காணிப்புக் கேமராவும், காவலாளியும் இல்லாத நிலையில் இந்த்க கொள்ளைச் சம்பவம் நடந்தேறியது. இதனால் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வந்தனர்.
இந்த சம்பவத்தின் பாதிப்பே தீராத நிலையில், கடந்த 20ம் தேதியன்று கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தது போலீஸாரையும், மக்களையும் அதிர வைத்தது. இரு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்ததால், இதில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். விசாரணையில் அது உண்மை என்று தெரிய வந்தது.
இந்த நிலையில்தான் வேளச்சேரியில் வைத்து ஐந்து கொள்ளையர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் கொள்ளைக் கும்பலின் தலைவனாக செயல்பட்ட எஸ்.ஆர்.எம். கல்லூரியின் முன்னாள் மாணவனும் அடக்கம்.
ஜனவரி 23ம் தேதி வங்கியில் கொள்ளையடித்த ஐந்து பேரும் சரியாக ஒரே மாதத்தில் அதாவது பிப்ரவரி 23ம் தேதி பிணமாகி விட்டார்கள்.
இந்த சம்பவத்தின் மூலம் எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் தங்களின் கழுகுக் கண்களிலிருந்து தப்பித்து விட முடியாது என்பதை தமிழக காவல்துறையினர் நிரூபித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
