'ஃப்ரீயா எழுதினா நிதிஷ் ஆட்சியில் சித்திரவதைதான்!'
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சியில் அரசுக்கு எதிராக எதை எழுதினாலும் சித்தரவதைகளையே பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது என்று பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
பீகாரில் ஊடக சுதந்திரம் குறித்து திரட்டப்பட்ட தகவல்கள் அவ்வளவு நன்றாக இல்லை.
அரசியல் சாசனத்தை மீறி நிதிஷ்குமார் அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த பிரஸ் கவுன்சிலின் மூவர் குழு விரைவில் பீகார் வரவுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு ஜனநாயகவாதி. அதை எவரும் ஏற்கவில்லை எனில் நான் என்ன சொல்ல?
கடந்த லாலுபிரசாத் ஆட்சியை ஒப்பிடுகையில் பீகாரில் நிதிஷ் அரசின் சட்டம் ஒழுங்கு பரவாயில்லை...
அதே நேரத்தில் லாலுவின் ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரம் இருந்தது. ஆனால் இப்போது நிதிஷ் ஆட்சியில் அது இல்லை.
அரசாங்கத்துக்கு எதிராக ஒரு செய்தியாளர் எழுதிவிட்டால் மாநில அமைச்சர்கள், ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து அவரை பணிநீக்கம் செய்துவிடுவது அல்லது பணியிட மாற்றம் செய்வது என்ற போக்கே நடந்து வருகிறது என்றார் அவர்.
இதேபோல் மராட்டிய மாநிலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது தொடர்பாக அம்மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு பத்திரிகை கவுன்சில் கடந்த புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications