இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமாம்: நாராயணசாமி
சென்னை: ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக மக்களும், அனைத்து கட்சிகளும் இதைத் தான் விரும்புகிறார்கள்.
தமிழக முதல்-அமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுபோல் முன்னாள் அமைச்சரும் டி.ஆர்.பாலு மூலமாக அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். நானும் பிரதமரை சந்தித்து இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளேன்.
இலங்கை மட்டுமின்றி எந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் இருந்தாலும் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதை இந்தியா ஆதரிக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, இலங்கை மீது ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றார் அவர்.
செய்தியாளர்களின் கேள்விகளும் நாராயணசாமி பதில்களும்
கேள்வி: இந்தியாவில் மேலும் 14 அணு உலைகள் கட்டுப்படும் என்று கூறி, உள்நாட்டு பிரச்சினையில் ரஷிய நாட்டு தூதர் தலையிடுகிறாரே?
பதில்: உள்நாட்டு பிரச்சினையில் ரஷிய தூதர் தலையிடவில்லை. அவர் பிரெஞ்சு தொழில் நுட்பத்தில் இந்தியாவில் அமைக்கப்பட உள்ள அணு உலைகளை பற்றி மட்டுமே கூறியுள்ளார். ஒரு நாட்டை மட்டும் நம்பி இந்தியா இல்லை. மற்ற நாடுகளுடன் சேர்ந்து குறைந்த செலவில் பாதுகாப்புடன் அணுமின் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: கூடங்குளம் எதிர்ப்பு இயக்கத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் பணம் உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டு மீதான விசாரணை எந்த நிலையில் உள்ளது?
பதில்: அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு பணம் வருவது உண்மைதான். ஆனால், அந்த பணம் தொண்டு நிறுவனம் எந்த நோக்கத்துக்காக கொடுக்கிறதோ அதற்காக செலவிடப்படாமல், வேறு செயலுக்காக செலவிடப்படுகிறது. இந்த பணப்பரிமாற்றத்தை ஆய்வு செய்தபோது, 4 நிறுவனங்களில் பொய்யான கணக்குகள் எழுதப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மீதான விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ. வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழக அரசும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கேள்வி: பிடிபட்ட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரை திரும்ப அனுப்பாமல், நாமே விசாரணை நடத்தியிருந்தால் உண்மையை கண்டுபிடித்திருக்கலாமே?
பதில்: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற இடத்தில் 15 நாட்கள் தங்கியிருந்துள்ளார். அவரின் லேப்-டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆதாரம் மட்டுமே கிடைத்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்,












Click it and Unblock the Notifications