பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ-வெளியிடுகிறது சேனல் 4!

சமீப ஆண்டுகளில் உலகின் மிகக் கோரமான போர்க்குற்றம் நடந்த பூமி இலங்கை என்று சொல்லும் அளவுக்கு மிகக் கொடூரமான இனப்படுகொலையை இலங்கை ராணுவம் நடத்தி முடித்தது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில். லட்சக்கணக்கான தமிழர்களை மிகக் கொடூரமாக கொன்று குவித்த இலங்கை ராணுவம், தமிழர்களின் உடல்களை மண்ணில் புதைத்து புல்டோசர் வைத்து அந்த அடையாளத்தையும் துடைத்தழித்தது.
ஈழ மண்ணில் நடந்த ரத்த வெறியாட்டம் தொடர்பான புகைப்படங்களையும், வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு உலகையே நடுங்க வைத்தது சேனல் 4 நிறுவனம். இன்று இலங்கைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரங்கள்தான் வலுவாக நின்று கொண்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது ஐ.நா. மனிதஉரிமைக் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்க ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு காத்துள்ள நிலையில், புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது சேனல் 4 நிறுவனம். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான 12 வயது பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிடப் போவதாக அது அறிவித்துள்ளது.
இந்த வீடியோ வெளியாகும்போது இலங்கை ராணுவத்தின் கோர முகம் உலக சமுதாயத்தின் முன்பு மேலும் மோசமான முறையில் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோ, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் முன்பு இலங்கையை வெட்கித் தலைகுனிந்து நிற்க வைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த வீடியோ 2009ம் ஆண்டு மே 18ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதன்கிழமையன்று இந்த வீடியோவை சேனல் 4 நிறுவனம் ஒளிபரப்பவுள்ளது. இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
இலங்கை ராணுவத்தினரே இந்த வீடியோவைப் பிடித்துள்ளனர் என்று கூறபப்படுகிறது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை கொடூரமாக நிற்க வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றதாகவும் நம்பப்படுகிறது.
மிக மிக நெருக்கத்தில் வைத்து பாலச்சந்திரனை சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் இலங்கை வீரர்கள். பாலச்சந்திரனைக் காக்க நியமிக்கப்பட்டிருந்த ஐந்து விடுதலைப் புலி மெய்க்காப்பாளர்களையும் இதேபோல கொன்றுள்ளதாக தெரிகிறது. பாலச்சந்திரன் உடலுக்கு அருகே அந்த ஐந்து புலிகளின் உடல்களும் கிடக்கிறதாம். அனைவரையும் கண்ணைக் கட்டி கொடூரமாக கொன்றுள்ளனர். உடலிலும் ஆடைகள் இல்லை.
இந்த புதிய வீடியோ குறித்த செய்தியை லண்டனின் இன்டிபென்டன்ட் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பிரபல பேத்தாலஜிஸ்ட் பேராசிரியர் டெரிக் பெளன்டர் கூறுகையில், முதலில் அந்த ஐந்து பாதுகாப்பாளர்களையும் இலங்கைப் படையினர் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதை பாலச்சந்திரனை நேரில் அமர வைத்து பார்க்க வைத்துள்ளனர் என்றும் கருதுகிறேன். அதன் பின்னர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.
அந்த சிறுவனின் கை தொடும் தூரத்தில் துப்பாக்கியை வைத்து சுட்டிருப்பார்கள் என்றும் கருதுகிறேன். இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மிகக் கொடூரமானது என்றார்.
சிறுவன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள இந்த புதிய செய்தி உலகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் மூழ்கடிப்பதாக உள்ளது. உலக தமிழ் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறுகையில், ராஜசபக்சே, அவரது சகோதரர்கள், அவரது ராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கும்பல் செய்த போர்க்குற்றத்தின் உக்கிரத்தை இந்த வீடியோ பறை சாற்றும் என்று நம்புகிறோம். இவை சாதாரண போர்க்குற்றமல்ல, மனிதகுலத்திற்கு எதிரான மிகப் பயங்கரமான, பயங்கரவாத செயலாகும். உலக சமுதாயம், குறிப்பாக இந்தியா இனியாவது தனது கண்ணை முழுமையாக திறந்து பார்க்க முன்வர வேண்டும். அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து இலங்கையை சட்டத்தின் முன்பு நிறுத்தி கொடூரமாக மடிந்து போன அப்பாவித் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றார் கோபத்துடன்.
ஆனால் வழக்கம் போல புதிய வீடியோவையும் திரிக்கப்பட்டது, போலியானது என்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications