இடைத்தேர்தலில் அதிமுக தான் ஜெயிக்கணும்: சிங்கப்பூர் தொழிலதிபர்கள் வேண்டுதல்
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற சிங்கப்பூர் தொழில் அதிபர்கள் இருவர் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நாளை சங்கரன்கோவில் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் ஆன்டரியோ பிரிட்ஜஸ், ஜான் ஆங் ஆகியோர் வந்தனர். அவர்கள் சிங்கப்பூரில் பெரிய கட்டுமான நிறுவனம் வைத்துள்ளனர். அதில் ஆன்டரியோ கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
தமிழகத்தில் தங்கள் நிறுவனத்திற்கு தொழில் வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கவும், புதிய தொழில் துவங்க ஆலோசனை நடத்தவும் இங்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அந்த 2 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், திருமயம் எம்.எல்.ஏ. வைரமுத்து, சுப்பிரமணியன், ராமலிங்கம், சங்கரன்கோவில் நகர பேரவை தலைவர் அப்துல் கனி, தொழிலதிபர் பழனித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications