காருக்குள் இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுக்க போலீஸ் முடிவு?
சென்னையில், பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி இறந்த குழந்தையின் உடலை புகார் கொடுக்காமல் பெற்றோர் அடக்கம் செய்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. புதைக்கப்பட்ட சிறுவனின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னை, பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் மாருதி(25). இவர் உணவு பொருள் கழகத்தில் லாரி வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பூட்டிய காருக்குள் இருந்த மாருதியின் 2 வயது மகன் இளமாறன் மூச்சுத் திணறி பலியானான். அருகிலிருந்த மருத்துவமனையில் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியும் கேட்காமல் வீட்டுக்கு தூக்கி வந்துவிட்டார் மாருதி.
மேலும், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்துவிட்டனர். மருத்துவமனையிலிருந்து தகவல் அளித்தும் இதுதொடர்பாக புகார் எதுவும் செய்யப்படாததால் போலீசார் விசாரணை நடத்த முடியாமல் இருந்தனர்.
இந்த நிலையில், குழந்தையின் சாவு குறித்து பட்டாபிராம் விஏஓ கஜேந்திரன் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, குழந்தையின் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்துவதற்காக நீதிமன்ற அனுமதியும் கோரியுள்ளனர்.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து போலீசார் விசாரணை நடத்துவர் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications