முதல்வர் அகிலேஷிடம் 50 துறைகள்- "தாதா" அமைச்சருக்கு சிறைத்துறை
லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தம் வசம் 50 துறைகளை ஒதுக்கிக் கொண்டுள்ளார். சர்ச்சைக்குரிய தாதாவான ராஜபையாவுக்கு சிறைத்துறையை ஒதுக்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அகிலேஷ் யாதவ் மற்றும் 47 பேர் கடந்த வாரம் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 28 பேர் இணை அமைச்சர்கள்.
தனது அரசு சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று உறுதியளித்த உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தான் பதவியேற்ற மாலையிலேயே பிரபல தாதாவான ராஜா பய்யாவை அமைச்சராக்கினார். இதனால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவரை நம்பி வாக்களித்த மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடைபெற்றது.
முதல்வர் அகிலேஷ் யாதவ் முக்கிய 50 இலாகாக்களை தன்வசம் வைத்துக்கொண்டார். உள்துறை, கண்காணிப்பு துறை, மின்சாரம், வனத்துறை, வீட்டு வசதி துறை, நிதி, உற்பத்தி வரி, பணி நியமனங்கள், தகவல் தொடர்பு, எஸ்டேட், உள்ளிட்டவை அகிலேஷூக்கு! நாட்டிலேயே அதிக துறைகள் வைத்திருக்கும் ஒரே முதல்வர் அகிலேஷ்தான்! கிரிமினல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்த ராஜா பய்யாவுக்கு சிறைத்துறை மற்றும் உணவுத்துறையை வழங்கியுள்ளார் அகிலேஷ்.
முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியில் கிரிமினல் குற்றங்களுக்காக ராஜா பய்யா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சமாஜ்வாடி ஆட்சி என்றாலே குண்டர்கள் ஆட்சி என்ற பழமொழியை அகிலேஷ் மாற்றுவார் என்று நினைத்தபோது அவர் ஒரு தாதாவை அமைச்சராக்கியுள்ளார். அவரது அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள இன்னொரு அமைச்சரான மெஹ்பூப் அலி மீது கொலை, கடத்தல், வழிப்பறி உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சட்டம் ஒழுங்கை சீர் செய்வதே தன்னுடைய ஆட்சியின் நோக்கம் என்று அகிலேஷ் கூறியது பொய்யோ என்று நினைக்கும்படி உள்ளது அவரது நடவடிக்கைகள்.


Click it and Unblock the Notifications
