சிக்குமா இலங்கை... இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் விவாதம்- நாளை வாக்கெடுப்பு!

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இலங்கைக்கு எதிரானதாக வர்ணிக்கப்படும் அத்தீர்மானத்தில், இலங்கை அரசு அமைத்த போரில் கற்ற பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதை மனித உரிமைக் கவுன்சில் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து வலுவான கருத்து எதையும் இந்த தீர்மானம் வலியுறுத்தவில்லை. எனவே இந்த தீர்மானமே ஒரு கண்துடைப்புதான் என்பது பல ஈழத் தமிழ் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இருப்பினும் இந்தத் தீர்மானத்தைக் கூட இந்தியா ஆதரிக்க முன்வராமல் இருந்து வந்தது. ஆனால் தமிழகத்திலிருந்து வரலாறு காணாத எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இந்திய அரசு இறங்கி வந்தது. தீர்மானம் என்ன என்று தெரியாவிட்டாலும் கூட அதை ஆதரிப்போம் என்று லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டால் அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை, இந்தியாவை சமாதானப்படுத்த கடுமையாக முயன்று வருகிறது. இதற்காக ஜெனீவா வந்துள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்த தீர்மானத்தின் மீதான இன்று விவாதம் நடைபெறுகிறது. இதையடுத்து நாளை இந்தத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வரவுள்ளது. தீர்மானத்தை தற்போது 23 நாடுகள் ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தீர்மானம் நிறைவேற 24 நாடுகளின் ஆதரவு தேவை. அந்த ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இதனால் இலங்கைத் தரப்பு பெரும் குழப்பத்திலும், பயத்திலும் உள்ளது. உறுப்பு நாடுகளை சமரசப்படுத்த இலங்கைத் தரப்பு மேற்கொண்ட எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தீர்மானத்தை முடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை.
நேற்றே இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தற்போது இது தள்ளிப் போயுள்ளது.












Click it and Unblock the Notifications