பியாந்த்சிங் கொலை வழக்கு: ரஜோனாவை மார்ச் 31ல் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மார்ச் 31-ந் தேதி நிறைவேற்றுமாறு பாட்டியாலா சிறைக்கு சண்டிகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த தீர்ப்பை எதிர்த்து ரஜோனாவை தூக்கிலமுடியாது என்று பதில் மனு அனுப்பிய பாட்டியாலா சிறை கண்காணிப்பாளருக்கும் அவமதிப்பு வழக்கு நோட்டீஸையும் நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்து ரஜோனாவின் தூக்கை ரத்து செய்யுமாறு வலியுறுத்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் திட்டமிட்டுள்ளார்.
மத்திய காங்கிரஸ் அரசோ ஏற்கெனவே 1984-ம் ஆண்டு சீக்கியர்கள் மீதான வன்முறையை நிகழ்த்திய கறையிலிருந்து விடுபடாத நிலையில் ரஜோனாவை தூக்கிலிடும் விவகாரத்தில் பதைபதைப்புடனே இருக்கிறது.
பஞ்சாப் அரசாங்கமோ, ரஜோனாவை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தியிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் என்ன செய்வது என்று தவித்து வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சட்ட அமைச்சர் சல்மான்குர்ஷித், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே முடிவு செய்யும்...நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்" என்று ஒதுங்கிக் கொண்டார்.
இதனிடையே ரஜோனா தூக்கு தண்டனை விவகாரமானது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கு பெருமளவு போலீசாரும் துணைராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை போராட்டம்
ரஜோனாவின் தூக்கை எதிர்த்து சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகால் தத் ஏற்கெனவே அழைப்புவிடுத்திருந்தபடி நாளை மாநிலம் தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. சீக்கியர்கள் அனைவரும் காவி நிற உடைகளை அணிந்தாக வேண்டும் என்று மதகட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications