சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் சுட்டு நெல்லை ராணுவ வீரர் பலி

அசாம், ஒடிசா, கொல்கத்தா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அவர்கள் திடீர் திடீரென்று ஊருக்குள் புகுந்து அப்பாவிகளைக் கொல்வதும், அவர்களை பிடிக்க முயலும் போலீசாரை சாகடிப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.
இதுபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்காக ராணுவ படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் சுக்னா மாவட்டத்தில் பீஜி என்ற இடத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஊத்துமலையை சேர்ந்த கருப்பையா மகன் கொடிகாத்த குமரன் என்பவர் பலியானார். அர்ஜுன் ராவ் என்ற வீரர் காயமடைந்தார்.
கொடிகாத்த குமரனின் உடல் விமானம் மூலம் இன்று திருவனந்தபுரம் வருகிறது. அங்கிருந்து காரி்ல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது. இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியான கொடிகாத்த குமரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு சரஸ்வதி, கைலாப் என்ற மூத்த சகோதரிகளும், குருசாமி என்ற அண்ணனும் உள்ளனர். குமரன் ஒரு ஆண்டுக்கு முன்பு தான் ராணுவத்தில் சேர்ந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications