சட்டசபைக்கு வந்த கருணாநிதி-பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிச் சென்றார்!
சென்னை: மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்தார். பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு அவை நடவடிக்கைகள் எதிலும் பங்கேற்காமல் திரும்பிச் சென்றுவிட்டார்.
கருணாநிதியை பொறுத்த வரை அவர் வீல் சேரில் தான் சபைக்குள் வர முடியும். ஆனால் அவருக்கு இந்த சேரில் வந்து அமரும் வகையில் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
மேலும் அவர் எதிர்கட்சி தலைவராகவோ. திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகவோ இல்லாததால் அவருக்கு பின் வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், சட்டமன்றத்துக்கு தொடர்ந்து வராமல் இருக்கக் கூடாது என்ற விதி காரணமாக இன்று அவர் அவைக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பினார். அவை நடவடிக்கைகள் எதிலும் பங்கேற்கவில்லை.
விஜய்காந்த் வரவில்லை:
கடந்த கூட்டத்தொடரில் சபையில் நாக்கை துறுத்தி கை நீட்டி பேசியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் எதிர்க் கட்சித் தலைவரான விஜய்காந்த். இவரது 10 நாள் சஸ்பெண்ட் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று அவர் சட்டசபைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.
நேற்று விஜய்காந்தை 'நிதானமில்லாதவர்' என்று மறைமுகமாகத் தாக்கி சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ 'கதை' சொல்ல, தேமுதிக எம்எல்ஏக்கள் அதை கண்டிக்க, அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது நினைவுகூறத்தக்கது.
திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்:
சட்டசபையில் இன்று கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் பேசுகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி 1970ல் முதல்வராக இருந்தபோது குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்த திட்டத்தை அவர் கொண்டு வந்தார் என்றார்.
மேலும் திமுக ஆட்சியின் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களையும் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் வைத்திலிங்கம், திமுக ஆட்சியில்தான் இந்த துறையில் ஊழல் நடந்தது. பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. கோவை அம்மன்குளம், உக்கடம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட அரசின் அடுக்கு மாடி குடியிருப்புகள் பூமிக்குள் புதைந்தன என்றார்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், 2ஜி அலைவரிசையிலும் மெகா ஊழல் நடந்தது. அதற்கும் திமுகவினர் தான் காரணம் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழல், கொள்ளை என்ற வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் குரல் கொடுத்தனர். சபாநாயகர் ஜெயக்குமார் அதை ஏற்கவில்லை.
ஆனாலும் திமுகவினர் தொடர்ந்து எழுந்து நின்று குரல் கொடுத்தவாரே இருந்தனர்.
இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications