பெயிலாகிவிடுவேன் என்ற பயத்தில் போகிறேன்: தற்கொலை செய்து கொண்ட மாணவி உருக்கமான கடிதம்

விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே உள்ள சேத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் எஸ். தைரியலட்சுமி(18). சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தமிழ் வழியில் படித்து வந்தார். தைரியலட்சுமியின் தாய் இறந்துவிட்டார். அவருக்கு தந்தை சக்திவேல் மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உள்ளனர். அவருடையது ஏழ்மையான விவசாய குடும்பம்.
அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அவரது அறையில் அவருடன் 6 மாணவிகள் தங்கி இருந்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு கல்லூரிக்கு சென்ற தைரியலட்சுமி 10.30 மணிக்கு விடுதிக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தற்செயலாக அவரது அறையில் தங்கியிருந்த ஒரு மாணவியும் விடுதிக்கு சென்றுள்ளார்.
அந்த அறைக்கு இரண்டு வழிகள் உண்டு. முன்பக்க கதவு உட்புறமாக பூட்டியிருந்தததால் அந்த மாணவி பின்புறமுள்ள கதவை திறந்து அறைக்குள் சென்றபோது தைரியலட்சுமி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அவர் அலறினார். உடனே அவர் விடுதி ஆயாவிடம் விஷயத்தைக் கூற அவர் வார்டனிடம் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் துணை வேந்தர் ஜவகர், கல்லூரி டீன் சேகர் ஆகியோர் அந்த அறைக்கு சென்றனர். மாணவி இறந்துவிட்டதை உணர்ந்த அவர்கள் கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தைரியலட்சுமி தற்கொலை செய்யும் முன்பு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
என்னால எதுவும் சரியாக செய்ய முடியலை. நல்லா படிக்க முடியலை. நிறைய பாடத்தில் பெயிலாகி உள்ளேன். ரொம்ப கஷ்டப்பட்டு எங்க வீட்டில் என்னை படிக்க வைக்கிறாங்க. அதற்கு ஏற்றபடி என்னால் படிக்க முடியலை. 2வது செமஸ்டரிலும் பெயிலாகிவிடுவேன் என்று பயமாக உள்ளது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் சொல்லித்தருகிறார்கள். யாரும் தப்பா நினைக்காதீர்கள். நான் போகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவ-மாணவியரால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால் பிற மாணவர்கள் பணம் திரட்டி கட்டணத்தை கட்டுகின்றனர். இதற்காக துளிர் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில் இருந்த மாணவர் மணிவண்ணன் என்பவர் 24 பாடங்களில் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் கல்விக் கட்டணம் செலுத்த தைரியலட்சுமி பணம் கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
மணிவண்ணனும், தைரியலட்சுமியும் காதலர்கள் என்று மாணவர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. மணிவண்ணன் இறந்த அன்று மட்டும் தைரியலட்சுமி அவருக்கு 40 தடவை போன் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை உறுதிபடுத்த முடியவில்லை.
தைரியலட்சுமியுடன் தங்கியிருந்த மாணவிகள் கூறுகையில், தைரியலட்சுமி எப்பொழுமே தனிமையில் இருப்பார். யாருடனும் சரியாக பேசமாட்டார். தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பார். விரக்தியாக இருப்பார். பரீட்சையில் பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்திலேயே இருந்தார். நாங்கள் எவ்வளவு தைரியம் சொல்லியும் அவரது பயம் போகவில்லை. அவரது சாவு எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றனர்.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 84 மாணவ-மாணவியர் படிக்க முடியவில்லை என்று கூறியும், காதல் தோல்வியாலும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி தைரியலட்சுமி தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. கடந்த வாரம் கூட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தோம். ஏதாவது பாடத்தில் பெயிலான பி.இ. முடிப்பதற்குள் அதை மறுபடியும் எழுதி பாஸாகிவிடலாம் என்று கூறியிருந்தோம். ஆனால் அப்படியும் அவர் தற்கொலை செய்துள்ளது துரதிர்ஷடமானது.
மாணவ-மாணவியர் யாரும் தயவு செய்து இத்தகைய முடிவை எடுக்காதீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
படம்- தி ஹிண்டு












Click it and Unblock the Notifications