ரூ.50 கோடி லஞ்சம் கேட்கும் போலீஸ், அதிமுக பிரமுகர்கள்: மார்ட்டின் மனைவி புகார்

கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கணவர் மார்ட்டினை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக அதிமுக பிரமுகர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் ரூ.50 கோடி பணம் கேட்கின்றனர்.
காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெரிய தொகையாக லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் தமது பெயரை சொல்ல மறுத்துவிட்டார். எந்த டிபார்ட்மெண்ட்டு என்றும் கூறவில்லை. இப்படி பணம் கேட்டு பலரும் மிரட்டுகின்றனர். அப்படிப் பணம் கொடுக்காமல் போனால் வழக்கு மேல் வழக்குப் பதிவு செய்து சிறையிலேயே இருக்கச் செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
என் கணவர் மீது குண்டர் சட்டம் பாய்வதற்கு முன்பு 8 வழக்குகள் போடப்பட்டன. அவர் மீதான குண்டர் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபின்னர் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
என் கணவர் மீதான அனைத்து வழக்குகளும் பொய் வழக்குகளே. அவரது தொழில்ரீதியான எதிரிகளே இதற்குக் காரணம் என கருதுகிறோம். என் கணவர் மீதான வழக்குகள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்.
ஈரோட்டில் செவ்வாய்க்கிழமையன்று என் கணவர் மீது ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. தாம் வாங்கிய லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு விழவில்லை என்பது புகார். இந்த வழக்கில் கணவரை சேர்த்து விடுவோம் என்று அவரை சிறையிலேயே போய் ஈரோடு போலீசார் மிரட்டியுள்ளனர்.
ஜெ.வை சந்திக்க முடிவு:
இது தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டிருக்கிறோம். "அம்மா" நேரம் ஒதுக்கிக் கொடுத்தால் என் கணவர் மார்ட்டினுக்கு எதிரான அனைத்து சதிகளையும் போட்டு உடைத்துவிடுவேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications