சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலாவை விசாரிக்க 3 வாரம் தடை விதித்த கர்நாடகா ஹைகோர்ட்

முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா நடராஜன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலிதா ஆஜராகி அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டார். மேலும் விசாரணையில் ஆஜராவதிலிருந்தும் விலக்குப் பெற்றுள்ளார்.
இதையடுத்து சசிகலாவிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரிடம் கேட்பதற்காக நீதிமன்றம் தயாரித்த 1000 கேள்விகளில் அவர் இதுவரை 632 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளார். விசாரணையின்போது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டன. அந்த ஆவணங்களைப் படித்துப் பார்த்தால் தான் தன்னால் பதில் அளிக்க முடியும் என்று சசிகலா தெரிவித்தார். மேலும் ஆவணங்களைப் படித்துப் பார்க்க அவற்றை தனக்கு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி மல்லிகார்ஜுனையா அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சசிகலா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி பி.வி.பின்டோ முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சசிகலாவுக்கு எதிரான நீதிமன்ற நடைமுறைகளுக்கு 3 வார கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் உத்தரவி்டடார்.












Click it and Unblock the Notifications