சேலம் அங்கம்மாள் காலனி குடிசைக்கு தீ, சூறையாடல்: வீரபாண்டியார் உள்பட 20 பேர் மீது வழக்கு

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனி இடத்தை முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரது ஆட்களும் அபகரித்துக் கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அங்கம்மாள் காலனியில் முன்பு வசித்தவர்கள் சிலர் அங்கு வந்து மீண்டும் குடிசை போட்டு அந்த இடத்திற்கு காவேரி நகர் என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் நேற்றிரவு 30க்கும் மேற்பட்டோர் அந்த காலனிக்கு வந்து ஒரு குடிசைக்கு தீ வைத்தனர். மேலும் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட குடிசைகளை சூறையாடினர். அஙகுள்ளவர்களையும் மிரட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகம் தான் என்று அந்த குடிசைவாசிகள் கொடுத்த புகாரின்பேரில் சேலம் பள்ளப்பட்டி போலீசார் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில்,
என் மீதும், திமுக நிர்வாகிகள், தோழர்கள் மீதும் பொய் வழக்கு போட்டுள்ளனர். இதை நான் சட்டப்படி சந்திப்பேன். அங்கம்மாள் காலனி பிரச்சனை குறித்து பொதுமக்களுக்கே நன்கு தெரியும்.
அந்த காலனி நிலத்தை ஒருவர் வாங்கி அதை பார்த்துக் கொள்ள ஒரு பெண்ணை நியமித்தார். அப்படி இருக்கையில் அந்த இடத்தில் கணேசன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் திடீர் என்று குடிசை போட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் அவர்களிடம், ஏன் இப்படி இங்கு குடிசை போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அநத் பெண்ணின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன், அவரை மிரட்டியும் உள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் சேலம் பள்ளப்பட்டி போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். அவரது புகார் குறித்து எப்.ஐ.ஆர். போட்ட போலீசார் அடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பெண்ணின் புகாரின்பேரில் தீண்டாமை ஒழிப்பு பிரிவின் கீழ் அவர்களை கைது செய்திருக்கலாம். அல்லது புகார் குறித்து விசாரணை நடத்தி அந்த பெண்ணை மிரட்டியவர்களையாவது கைது செய்திருக்கலாம். ஆனால் புகார் கொடுத்து 1 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
தற்போது என்னவென்றால் குடிசைகளை தள்ளிவிட்டு ஒரு குடிசைக்கு தீவைத்துவிட்டதாக பொய் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் மற்றும் சம்பவத்திற்கும் எனக்கும், மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டும் என்றே பொய் வழக்கு போட்டுள்ளனர். அதை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications