ஒரு கல்யாணத்துக்கு போனதுக்கு இவ்வளவு அக்கப்போரா?
சேலம்: இல்லாத பதவிக்கு மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரை அரசு நியமித்துள்ளதாக பரவிய தகவலால் அரசு அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சி அலை ஏற்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த ராவணன், மிடாஸ் மோகன் பணத்துக்காக கடத்துதல், சட்ட விரோதமாகத் தடுத்து வைத்தல், பணம் பறி்ப்பு, கிரிமினல் சதித் திட்டம் போன்ற பல வழக்குகளிலும், மற்றும் சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் கணவர் நடராஜன் போன்றவர்கள் கிரிமினல் சதித் திட்டம், நில ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழும் கைது செய்யப்பட்டனர். பின்பு இவர்கள் ஜாமீன் வெளியே வந்தனர். ஆனால் அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மே 23 ம் தேதி நடராஜன் தம்பி ராமச்சந்திரனின் மகன் திருமணமும், நடராஜனின் தங்கையின் மகள் திருமணமும் மே 25 ம் தேதி தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த சிலரும், அதிகாரிகள் சிலரும் இந்த திருமணத்திற்கு ரகசியமாக சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு ரகசியமாக சென்று வந்தவர்கள் லிஸ்ட்டை உளவுத்துறை முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு அனுப்பி வைத்தது.
அதன்படி அதிமுகவில் இருந்து தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், மாரியம்மன் கோவில் ஊராட்சித் தலைவர் ஆர்.தனசேகர், தஞ்சாவூர் நகராட்சி, 26 வது வார்டு உறுப்பினர் பி.ராஜேஸ்வரன் ஆகியோருக்கு கட்சியில் இருந்து கல்தா கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு சென்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவருக்கும் உளவுத்துறை வேட்டு வைத்துவிட்டது.
அவர் வேறு யாருமல்ல. தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த கிரி. (சசிகலா) நடராஜன் இல்ல திருமணத்திற்கு சென்றதற்காக இவர் தஞ்சையில் இருந்து சேலம் போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக மாற்றப்பட்டார்.
வேதனையை நெஞ்சில் சுமந்தபடி கிரி அங்கு சென்று பதவியேற்க சென்ற போது அப்படி ஒரு பதவியே இல்லை என அங்கிருந்த உயர் அதிகாரிகள் கூற, இதை அறிந்து மனம் ஒடிந்துவிட்டாராம். அவருக்கு ஆறுதல் கூற அங்கு யாரும் முன்வரவில்லையாம்.
ஒரு திருமணத்திற்கு போனதற்கு இவ்வளவு அக்கப்போரா என்று அவர் நொந்துள்ளார்.












Click it and Unblock the Notifications