கூடங்குளம்: மேட்டரே தெரியாமல் சி.பி.எம். உளறுகிறது- தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
சென்னை: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பித்தலாட்டம் செய்வதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சமீபத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் 20வது அனைத்திந்திய மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ், செய்தாப்பூர் அணு உலை என்பது தனியார் நிறுவனத்தின் அணு உலை என்பதாலும், அமெரிக்க அணு ஆயுதத் திட்டத்தோடு இந்தியாவை இணைக்கும் என்பதாலும் அந்த அணு உலையை சி.பி.எம். எதிர்த்தது. ஆனால் கூடங்குளம் அணு உலைத் திட்டம் அப்படி அல்ல. இது சோசியலிச சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். எனவே தான் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை ஆதரித்தோம் என்று கூறியுள்ளார்.
அணு உலையிலும் அதில் வெளியிடும் அணுக் கதிரியக்கத்திலும் தத்துவ வேறுபாடு எதுவுமில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் அணு உலை அணுக்கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது. முதலாளிய அணு உலை தான் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமில்லை. யார் நிறுவினாலும் அணு உலை அணு உலை தான். தீமை விளைவிப்பவை தான்.
மேலும், பிரகாஷ் காரத் சொல்லுவது போல் இப்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலை கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது அல்ல. 1988ல் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்நாடு சிதறுண்டதுடன் காலாவதியாகிவிட்டது. எனவே, பொதுவுடைமையைக் கைவிட்டு முதலாளியத்திற்குத் திரும்பிய ரஷ்ய நாட்டுடன் 2001ம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே கூடங்குளம் அணு உலை ஒப்பந்தமாகும். இதை செயல்படுத்தும் இப்போதைய ரஷ்ய அதிபர் புடின், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னடி குயனைவை தோற்கடித்து பதவிக்கு வந்தவர்.
இந்த புடின் ஆட்சி தான் கூடங்குளம் அணு உலையை செயல்படுத்தப் போகிறது. எனவே, பிரகாஷ் காரத் குறிப்பிடுவதைப் போல் கூடங்குளம் அணு உலையோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பதற்கு அப்பட்டமான பொய்யையும், அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் பிரகாஷ் காரத் பேசி வருகின்றார்.
அதே போல நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் பேசும் போது, கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வி.வி.இ.ஆர். 1000 என்ற ரஷ்ய அணுஉலை செய்தாப்பூரில் நிறுவப்பட இருந்த பிரெஞ்சு அணு உலையை விட உயர்ந்த தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. எனவே தான் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கிறோம் என்றார்.
வி.வி.இ.ஆர். 1000 தொழில்நுட்பம், 13 உடனடியாக சரி செய்யவேண்டிய முக்கியமான பாதுகாப்புக் கோளாறுகளை உள்ளடக்கியது என ரஷ்ய நாட்டு அணு உலை அறிவியலாளர்களே அறிவித்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமரிடம் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர். 1000 அணு உலை அது இயங்கத் தொடங்கிய 2வது ஆண்டிலிருந்தே பாதுகாப்புக் கோளாறுகளில் சிக்கிக் கொள்ளும். அதில் உள்ள கட்டுப்பாட்டுக் கம்பி (Control Rod) இயங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அணு உலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் உயர்ந்து சிறுக்கீறல் முதல் பெரு வெடிப்பு வரை நிகழ் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி வி.வி.இ.ஆர். 1000 அணு உலையில் மையக்கலனில் உள்ள பற்றவைப்புகள் (Welding) பலவீனமானது என்றும், தொடர்ச்சியான அணுத்துகள்களின் மோதல்களின் விளைவாக அவை இற்றுப்போக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர். உண்மை இவ்வாறிருக்க வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை பாதுகாப்பானது என்று பேசிய ஜி.இராமகிருஷ்ணனுக்கு எங்கிருந்து அறிவியல் சான்று கிடைத்ததோ தெரியவில்லை.
அடுத்து கோழிக்கோடு மாநாடு தீர்மானங்கள குறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கைகா அணு உலையைப் போல கூடங்குளம் அணு உலை ஏற்கனவே இயக்கத்தில் உள்ளது. அதிலிருந்து ஏற்கனவே மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. ஆனால் செய்தாப்பூர் அணு உலை இனிமேல் தான் நிறுவப்பட வேண்டும். எனவே தான் கூடங்குளம் அணு உலையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பிய பின்பு தான் மின்சார உற்பத்தி நடக்கும் என நாள்தோறும் அரசு அறிவித்து வருகிறது. இந்த அடிப்படைத் தகவல் கூட தெரியாமல் சீதாராம் யெச்சூரி பேசியுள்ளார்.ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி தங்கள் முடிவை நியாப்படுத்த, மக்களைக் குழப்ப அக்கட்சியின் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடிந்தகரைக்கே வருவதாக அறிவித்தார். அக்கட்சித் தலைமை கட்டளையிட்டதால் கடைசி நேரத்தில் அப்பயணத்தைத் தவிர்த்துவிட்டார்.
இவ்வாறு கூடங்குளம் அணு உலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் பித்தலாட்டம் அளவிட முடியாமல் சென்று கொண்டிருக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications