விலைவாசியை கட்டுப்படுத்தாமல் பெட்ரோல் விலையை உயர்த்துவதா... ஜெ. கண்டனம்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக விலைவாசி உயர்ந்து வருவதும், ரூபாயின் மதிப்பு அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் இருப்பதும் வாடிக்கையாகவே நிகழ்ந்து வருகிறது. விலைவாசி உயர்வுக்கு அவ்வப்போது வித்திடும் வகையில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது.
23.5.2012 நள்ளிரவு முதல், வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தி, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகுந்த இன்னலுக்கு உள்ளாக்கியது. இந்த பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, அனைத்து தரப்பு மக்களும் தங்களது ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவித்த காரணத்தால், 2.6.2012 முதல் பெட்ரோல் விலையை 2 ரூபாய் அளவிற்கு குறைத்தது.
பின்னர், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிக அளவிற்கு குறைந்த நிலையில், 29.6.2012 அன்று 3 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் விலையை மத்திய அரசு மீண்டும் குறைத்தது.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிக அளவு குறைந்துள்ள நிலையில், ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, பெட்ரோல் விலையை குறைத்தது என்று நான் அப்போதே எனது அறிக்கையில் தெரிவித்திருந்தேன். கச்சா எண்ணெயின் சந்தை விலையை ஒப்பிடும் போது, மத்திய அரசால் உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தப்பட்ட அளவிற்காவது, பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும் என்று அப்போதே நான் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருந்தேன்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிக அளவு உயராத சூழ்நிலையில், 23.5.2012 அன்று ஏற்றப்பட்ட பெட்ரோல் விலை முழுவதுமாக திரும்ப பெறவேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் விழைவு ஆகும். அதனை செய்யாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் என்றும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என்றும் காரணம் காட்டி, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 70 காசு என்ற அளவிற்கு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
விண்ணை முட்டும் விலைவாசியையும், பணவீக்கத்தையும், வீழ்ச்சியடைந்து கொண்டே செல்லும் இந்திய ரூபாயின் மதிப்பையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்ற இந்த தருணத்தில், இதற்கு நேர்மாறான போக்கை மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் ஆகும். இந்த விலை உயர்வு முற்றிலும் நியாயமற்ற செயல் ஆகும். இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்ற செயலாகும்.
மத்திய அரசு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்ற வாதத்தை அடிக்கடி தொடர்ந்து கூறி விலையேற்றத்திற்கான காரணத்தை நியாயப்படுத்த முனைவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் தவறான பெட்ரோல் விலை நிர்ணய கொள்கையே இவ்வாறான பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு காரணமாகிறது.
எனவே, இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுவது மட்டுமல்லாமல், 22.5.2012 அன்று இருந்த அளவுக்கு பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications