பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர குறைக்கப்படக்கூடாது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர குறைக்கப்படக் கூடாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவின் 23-7-2012 அன்றைய அறிவிப்பு - 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களையும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்கழகமாக ஆக்கப் போகிறார்களாம்!

தமிழ்நாட்டின் 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களும் ஆராய்ச்சியில் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஒருமைப் பல்கலைக் கழகமாகவும் செயல்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள 571 பொறியியல் கல்லூரிகளும் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைவிக்கப்படும் என்று, கல்வியாளர்களைக் கலந்தாலோசிக்காமலேயே மாணவர்களின் நலனையும், ஆராய்ச்சியின் சிறப்பையும் கவனத்தில் கொள்ளாமலேயே ஒரு தலைப்பட்சமாக அறிவித்து, அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது.

உலக நாடுகள் எல்லாம் ஆண்டுக்கு ஆண்டு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகமாக்கிக் கொண்டு செல்லும் நேரத்தில், ஜெயலலிதா ஒரு புதிய கருத்தை தனது கண்டுபிடிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

அதாவது "அதிக எண்ணிக்கையில் பல்கலைக் கழகங்கள் தொடங்கினால் மட்டும் கல்வியின் தரத்தில் எந்தவிதமான உயர்வும் ஏற்படாது'' என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் கருத்து ஏற்கத்தக்க ஒன்று என்றால், சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ்தான் தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கல்லூரிகளும் இடம் பெறும் என்ற அறிவிப்பை அல்லவா செய்ய நேரிடும்? வருங்காலத்தில் ஜெயலலிதா அப்படியொரு அறிவிப்பைச் செய்யப் போகிறாரா?.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேவையில்லை. அனைத்தும் தலைமைச் செயலாளரின் நேரடிப் பார்வையிலே இயங்கும் என்றும், மாவட்டங்களிலே உள்ள காவல் துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு நேரடியாக டி.ஜி.பி. தலைமையிலே ஒருங்கிணைத்து இயங்கும் என்றும் ஜெயலலிதா அறிவிக்கப் போகிறாரா? பரவலாக்கப்பட்டதையெல்லாம் மாற்றி, மையப்படுத்தி ஒரு குடைக் கீழ்க் கொண்டு வரப் போகிறாரா?.

ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள் இயங்கும்போது, வளர்ச்சிக்காக அந்தப் பல்கலைக் கழகங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவும்.

சென்னையில் மட்டும் ஒரே ஒரு பல்கலைக்கழகம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எந்த ஒரு வேலைக்கும் குறிப்பாக மதிப்பெண்கள் குறித்த விசாரணைகள் செய்வது, ஆய்வுக் கட்டுரை சார்ந்த பணிகள் போன்றவற்றிற்காக மாணவ மாணவிகள் தொலைதூர நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதன் மூலம் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் வீண் அலைச்சலும் மன உளைச்சலும் பண விரயமும் கால விரயமும் உண்டாகும்.

பல்கலைக்கழக மானியக் குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள இது போன்ற கழகங்களும் இந்தியப் பல்கலைக் கழகங்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்விக்கு மானியம் வழங்குகின்றன. இத்தகைய மானியங்கள் மிகுந்த அளவில் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக, ஐந்து கோடி ரூபாய் மானியம் ஒரு பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்படுமெனில், ஆறு பல்கலைக்கழகங்கள் மொத்தமாக முப்பது கோடி ரூபாய் மானியம் பெறும் அளவுக்கு நிலை உயரும். இதன் மூலம் பல்கலைக் கழகங்கள் உரிய வளர்ச்சியினை எவ்விதத் தடங்கலும், தடையுமின்றி பெறும்.

தேசிய அறிவுசார் கழகம் மற்றும் இதர இந்திய தொழில் நுட்பக்கழகங்கள் சமீபத்தில் நடத்திய கணிப்பில், இன்னமும் 1,500 பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குத் தேவை என்றும், அவை விரைவில் நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது. எனவே, தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, குறைக்கப்படக் கூடாது.

ஐந்து தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களை ஒன்றாக்கி ஒரே தொழில் நுட்பப் பல்கலைக் கழகமாக்கினால், தமிழகத்திலுள்ள பல அறிவியல் மற்றும் கலைத் துறைக்கான பல்கலைக்கழகங்களும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டுமென்ற ஒரு சூழ்நிலை ஏற்படலாம் பல்கலைக் கழகங்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைவதால் அந்தந்தப் பகுதிகளிலும் தனித்தனியாக தொழில் வளர்ச்சியடையும். மேலும் பல மாணவ மாணவியர் அவரவர் பெற்றோர்களுடன் தங்கி உயர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறலாம்.

இதனால் மாணவர்களுக்குப் பாதுகாப்பும், ஆரோக்கியமான உணவும், இருப்பிடமும், ஒரு பல்கலைக் கழகத்துடன் சுமார் 100 கல்லூரிகள் வரையில் இணைவிக்கப்படலாம் என்றுதான் பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது. ஆனால் தற்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவின்படி 571 கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படவுள்ளன.

இதனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிர்வாகச் சுமை அதிகரிக்கும். அங்குள்ள ஆசிரியர்கள் ஆராய்ச்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+