அதிமுக பெண் கவுன்சிலரின் தாலிக்கே பாதுகாப்பில்லை... 6 பவுன் சங்கிலி பறிப்பு!
நாமக்கல்: திருட்டுச் சம்பவங்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமே இல்லாமல் போய் விட்டது. குறிப்பாக வழிப்பறிச் சம்பவங்கள் தினசரிச் சம்பவங்களாகி விட்டன. நாமக்கல்லில் அதிமுக பெண் கவுன்சிலரின் கழுத்தில் கிடந்த தங்கத் தாலிச் சங்கிலியை ஒருவன் அடித்துச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் நகராட்சியின் 30-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த சத்யா. இவர் தில்லைபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று காலை இவர் தனது வீட்டருகே நின்றபடி தனது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் திடீரென சத்யாவின் கழுத்தில் கையை வைத்து கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தாலிச் சங்கிலி மற்றும் இன்னொரு தங்கச் செயின் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதைப் பார்த்து சத்யா அலறவே கூட்டம் கூடி விட்டது. தகவல் அறிந்து கூடுதல் டிஎஸ்பி சுப்புலட்சுமி விரைந்து வந்து சத்யாவிடம் என்ன நடந்தது என்று விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸில் சத்யாவும், அவரது கணவரும் போய் புகார் கொடுத்தனர்.
பிள்ளைக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த அதிமுக பெண் கவுன்சிலரிடம், மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்திலேயே இப்படி தாலிச் செயினைப் பறித்துச் சென்ற செயல் நாமக்கல்லில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications