ரயில் கதவருகே நின்று பயணம் செய்த பெண் பாம்பன் கடலில் தவறி விழுந்து பலி: உறவினர்கள் கதறல்
ராமேஸ்வரம்: ரயில் பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக பாம்பன் கடலில் விழுந்த மத்திய பிரதேச பெண் பரிதாபமாக பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்பட். அவரது மனைவி கமலா ராணி (55). அவர்களும், அவர்களது உறவினர்கள் 20 பேரும், திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு ரயில் மூலம் வந்தனர். அவர்கள் ஆகஸ்ட் 30ம் தேதி ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் கன்னியாகுமரி செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 30ம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ரயில் பாம்பன் பாலத்தை கடந்துபோது கதவுக்கு அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கமலா ராணி மீது ரயிலின் கதவு எதிர்பாராவிதமாக வேகமாக மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கடலில் தலைகுப்புற விழுந்தார்.
இதையடுத்து அவரது கணவரும், உறவினர்களும் ரயிலை நிறுத்தக் கோரியும், அவரைக் காப்பாற்றக் கோரியும் சத்தம் போட்டனர். ஆனால் ரயில் மெதுவாக மண்டபம் ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கு கமலா ராணி கடலில் விழுந்த சம்பவத்தை நிலைய அதிகாரியிடம் அவரது கணவர் கன்பட் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலில் விழுந்தவரை மீட்க மண்டபம் கடலோர போலீசார் ரோந்து படகு மூலம் தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.
தற்போது பாம்பனில் சூறாவளிக்காற்று வீசி வருவதால் கமலா ராணி இதுவரை உயிரோடு இருக்க வாய்ப்பு குறைவு என காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கமலா ராணியின் சடலம் வேதாரண்யம், நாகை கடற்கரையில் கரை ஒதுங்கக்கூடும் என கருதிய போலீசார் அங்கு அவரது உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் விழுந்தவரின் உடல் கிடைக்காததால் அவரது உறவினர்கள் ஊர் திரும்பினர்.












Click it and Unblock the Notifications