ராஜபக்சேவை எதிர்க்க சென்னையில் இருந்து பஸ்களில் புறப்படும் வைகோ, மதிமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பிரதேசத்திற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து அங்கு கறுப்புக் கொடி போராட்டம் நடத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் வரும் 17ம் தேதி சென்னையில் இருந்து பேருந்தில் சாஞ்சிக்கு புறப்படுகிறார்கள்.

இது குறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே வருகிற 21ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருவதைக் கண்டித்து, சாஞ்சியில் கருப்புக்கொடி அறப்போர் நடத்துவதாக, பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார். சென்னையில் இருந்து ஆயிரத்துக்குக் குறையாத தோழர்கள் பேருந்துகளில் விதிஷா செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வைகோவும் பேருந்திலேயே சாஞ்சிக்கு வருகின்றார்.

வருகிற 17ம் தேதி பிற்பகலில் சென்னைக் கடற்கரை அண்ணா நினைவு இடத்தில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன. ஹைதராபாத், நாக்பூர் வழியாக 1,530 கிலோ மீட்டர்கள் பயணித்து, 19ம் தேதி பிற்பகலில் சாஞ்சி சென்று சேருகிறது. 21ம் தேதி அறப்போர் நடைபெறுகிறது. பயணக் கட்டணம் ரூ.3,000 ஆகும். அறப்போரில் கலந்து கொள்கின்ற தோழர்கள் உடனடியாகத் தலைமைக் கழகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு வைகோ கடிதம்:

புத்த பெருமானின் புனிதப் பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்குகின்ற ஒரு செய்தியைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விழைகின்றேன்.

புதுடெல்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ம் நாள் முதல் செப்டம்பர் மாதம் 5ம் நாள் வரையிலும் இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி தேசிய ஆவணக்காப்பகத்தின் பொது இயக்குநர் பிரவீண் ஸ்ரீவத்சவா, இலங்கை அரசின் புத்தசாசனம் மற்றும் சமயங்கள் துறையின் அமைச்சகச் செயலாளர் கேஷியன் ஹெராத் ஆகிய இருவரும், கொழும்பு நகரில் மே 18 ஆம் நாள் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு உள்ளனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது.

இந்திய அரசின் முடிவு வெந்துபோன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக இருக்கின்றது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்தது சிங்கள இனவாத அரசு. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட மூவர் குழு அளித்த அறிக்கை அதை உறுதிப்படுத்துகின்றது.

அப்பாவித் தமிழர்கள், குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோரை சிங்கள இராணுவம் ஈவு, இரக்கம் இன்றிக் கொன்று குவித்தது. இப்போது உலகநாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றது. மகிந்த ராஜபக்சேவையும், அவரது கூட்டாளிகளையும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு, இந்திய அரசு முனைப்போடு முன்நின்று பணியாற்றியது. இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முயன்றது.

எனவே, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்திட இலங்கைக்கு ஆயுதங்கள், இராணுவ உதவிகளை வழங்கிய இந்தியாவும் ஒரு கூட்டுக் குற்றவாளியே என்பதை நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிடுகின்றேன்.

2009ம் ஆண்டு, மே மாதத்தில் மட்டும் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் இந்தியா மகிந்த ராஜபக்சேவை பலமுறை இந்தியாவுக்கு அழைத்து, சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து, விருந்து அளித்துச் சிறப்பித்தது.

இப்போது இலங்கையில் தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே, ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு, இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது.

மே 17,18 ஆகிய நாள்களில், படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களை நினைவு கூர்ந்து, உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் வேதனையோடு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கின்ற வேளையில், மே 18ஆம் நாள், இந்தியா இப்படி ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு இருக்கின்றது. இந்திய அரசு, தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் இது.

புதுடெல்லி தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனிதப் பொருள்கள், இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க, பழமையான பொருள்களுள் ஒன்றாகும்.

இந்தியத் தொல்பொருள் துறையின் முதலாவது பொது இயக்குநரான அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அவர்கள், பிகார் மாநிலத்தில் பிப்ரவா என்ற இடத்தில், 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடத்திய அகழ்வு ஆராய்ச்சிகளின்போது, இந்தப் பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டன.

அந்த பிப்ரவாதான், பண்டைக்காலத்தில் கபிலவஸ்து என்று அழைக்கப்பட்டது. புத்தர் இயற்கை எய்தியபோது அவரது சாம்பலும், எலும்புத் துண்டுகளும், எட்டுக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, எண் திசையைச் சார்ந்த எட்டுக் குழுக்களிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து வைக்கப்பட்டது.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாபரிணிப்ப சுத்தா எழுதிய குறிப்புகளில், அத்தகைய ஒரு கூறு, கபிலவஸ்துவின் சாக்கியர்களிடம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புனிதம் நிறைந்த அப்பொருள்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது.

எனவே, புத்த பெருமானின் புனிதப் பொருள்களை, இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+