சிவகாசி ஆலையின் குத்தகைக்காரர் கைது, உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் தலைமறைவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் சுமார் 10 ஏக்கரில் அமைந்துள்ளது ஓம் சக்தி பட்டாசு ஆலை. சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு ஆலைகளில் ஓம் சக்தி பட்டாசு ஆலையும் ஒன்று. அங்கு சுமார் 300 பேர் பணியாற்றினர். நேற்று மதியம் 12.30 மணிக்கு அங்குபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர்.
ஓம் சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன், ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாகத் தேடி குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மேன் உதயகுமார், பட்டாசு கான்டிராக்டர்கள் பாண்டிதுரை, மகேந்திரன், ஸ்ரீகாந்த், அண்ணாதுரை ஆகியோரை கைது செய்தனர். அதில் மகேந்திரனும், பாண்டிதுரையும் பால்பாண்டியின் தம்பிகள் .
தலைமறைவாக உள்ள முருகேசன் மற்றும் 6 பேரை தனிப்படை வலை வீசித் தேடி வருகின்றது.
இதற்கிடையே பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க ரசாயனங்களைக் கலந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரசாயனப் பொருட்கள் மற்றும் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 48 அறைகளில் 40 அறைகள் தீயில் எரிந்து நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த மோசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications