தூத்துக்குடி துறைமுகத்தை கடல்வழியே சென்று முற்றுகையிட்ட மீனவர்கள்
தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் இன்று நடத்த முயற்சித்தனர். ஆனால் மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி துறைமுகம் இன்று முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 8 மணியளவில் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி கடல்வழியே மீனவர்கள் பயணம் மேற்கொண்டனர். தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் மீனவர்களின் கடல் வழி முற்றுகைப் போராட்ட்டம் கடலிலேயே தடுக்கப்பட்டதால் கடலுக்குள்ளேயே இருந்தபடியும் சிலர் துறைமுக வாயிலில் நின்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதே நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற பிரம்மாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தை தூத்துக்குடி கடற்கரை சாலையில் நடத்தினர்.
மீனவர்களின் கடல்வழிப் போராட்டத்தைத் தொடர்ந்து கடலோர காவல்படையின் கண்காணிப்பு விமானம் வானில் பறந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது.
இன்றைய துறைமுகம் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து 25-ந் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாநிலம் தழுவிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications