பெரியகுளம் அருகே சினிமா பாணியில் வேனை மறித்து ரூ. 36 லட்சம் 'முகமூடிக்' கொள்ளை!
பெரியகுளம்: பெரியகுளம் அருகே செங்குளத்துப்பட்டியில் தனியார் எண்ணெய் வேனில் வைக்கப்பட்டிருந்த 36 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச்சேர்ந்த ஆர்.கோல்ட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த வேனில் தேனியில் உள்ள டீலருக்கு எண்ணெய் விநியோகம் செய்துவிட்டு விற்பனை செய்த பணத்தை வெள்ளிக்கிழமையன்று ஈரோட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். வேனை ஈரோட்டைச்சேர்ந்த முருகன் மற்றும் கிளினர் சதிஸ் ஆகியோர் ஓட்டிக்கொண்டு வந்தனர். தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட செங்குளத்துப்பட்டி அருகே வரும்போது டாடா சுமோ காரில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் எண்ணெய் வேனை வழிமறித்து வண்டியில் உள்ள பணத்தை எடுத்து ஓட்டுநரையும் , கிளினரையும் கஞ்சா கடத்துகிறீர்களா எனக்கேட்டு காவல்நிலையம் செல்ல வேண்டும் என்று கூறி இறங்குமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் வேனில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு டிரைவரையும் கிளீனரையும் டாசுமோவில் ஏற்றிக்கொண்டு போய் ஆளில்லாத இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு தப்பிவிட்டனர். இதனையடுத்து வேன் ஓட்டுனர் தேனி ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். இதனையடுத்து தேனி ஏஜெண்ட் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கூறினார்.
புகாரின்பேரில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேது, ஏ.டி.எஸ்.பி.செல்வராஜ்,தேவதானப்பட்டி விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சினிமா பாணியில் பட்டப்பகலில் ஆள் உள்ள பகுதியில் 36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முகமுடி கும்பல் இதே பகுதியில் உள்ள கடைக்கார்களை தாக்கி கொள்ளையடித்தனர். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் உண்டியலை கொள்ளையடித்தனர். தற்போது 36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications