காவிரி.. கர்நாடகாவின் மறு ஆய்வு மனுவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

அதே நேரத்தில் இந்த விஷயத்தில் பிரதமர் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் தலைமைலான காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டது. அக்டோபர் 15ம் தேதி வரை தினமும் 9,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், இதை கர்நாடக அரசு ஏற்க மறுத்தது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு 28ம் தேதி கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தண்ணீரை திறந்துவிட்டு வருகிறது கர்நாடகம்.
இந் நிலையில் தமிழகத்துக்கு எதிரான போராட்டங்கள் கர்நாடகத்தில் வெடித்தன. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு ஒரு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது, அதில், நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு கர்நாடகம் ஏற்கெனவே 10,000 கன அடி நீர் வழங்கி உள்ளது. கடந்த 29ம் தேதியில் இருந்து தினமும் 9,000 கன அடி நீர் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்ய 123 டிஎம்சி தண்ணீரே போதுமானது. அதற்காக மேலும் 38 டிஎம்சி தண்ணீரை வழங்க கர்நாடகம் தயாராக உள்ளது. இது போக மீதமுள்ள நீர் மேட்டூர் அணையிலேயே உள்ளது.
எனவே, அக்டோபர் 15ம் தேதி வரை தினமும் 9,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
அந்த மனு இன்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், லோகுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன், தமிழகத்துக்கு காவிரியில் பிரதமர் உத்தரவிட்டதையும்விட கூடுதலாக கர்நாடக அரசு திறந்துவிட்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது. அப்படி திறந்துவிட்டால் கர்நாடகத்திற்கு குடிநீருக்கும் வேளாண் சாகுபடிக்கும் நீரில்லாத நிலைமை உருவாகும் என்று கூறினார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் கர்நாடக மாநில தலைவர்கள் முறையிட்டு வருவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவு 4 மாநில முதல்வர்கள் பங்கேற்ற நதி நீர் ஆணையத்தில் எடுக்கப்பட்டது. எனவே, எந்த முடிவானாலும் அதை அந்தக் குழு தான் விவாதித்து எடுக்க வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பிரதமர் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இது போன்ற முக்கியமான வழக்குகள் நடைபெறும் நிலையில் போராட்டங்கள் நடத்தப்படுவது என்பது வழக்கின் போக்கை திசை திருப்பும். மேலும் விவசாயிகள் பிரச்சனையான இதை அரசியலாக்க வேண்டாம். போராட்டங்கள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றனர்.
அப்போது வாதிட்ட கர்நாடக வழக்கறிஞர் நாரிமன், தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டதால், நதி நீர் ஆணையம் எந்த மாறுபாடான முடிவையும் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அஞ்சுகிறோம் என்றார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் எந்த முடிவையும் எடுக்கலாம். அவரை எங்களது உத்தரவு கட்டுப்படுத்தது என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிரான போராட்டங்கள் மேலும் தீவிரமாக உள்ளன. இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தமிழக பஸ்கள் மடிவாளாவோடு நிறுத்தம்:
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டங்களால் தமிழகம்-கர்நாடகம் இடையிலான போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.
போராட்டங்கள் காரணமாக கர்நாடகம் செல்லும் தமிழக பஸ்கள் ஒசூரிலும், பண்ணாரியிலும் நிறுத்தப்பட்டன. சனிக்கிழமை பந்த் நடந்ததையடுத்து பஸ்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டன.
நேற்று மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந் நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக இருந்ததால் தமிழக பஸ்கள் பெங்களூர் நகருக்குள் முழு அளவில் செல்லவில்லை.
மாலை 4 மணி வரை ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளாவோடு திரும்பிச் சென்றன. பின்னர் அவரை நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. ஆனாலும் நிலைமையைப் பொறுத்து பஸ்கள் மீண்டும் ஒசூரோடு நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications