கூடங்குளம் போராட்டம்: நவம்பர் 20ம் தேதி உதயக்குமார் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல வகையிலான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதில் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட 141வது வழக்கில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அவரது மனைவி மீரா, புஷ்பராயன் உள்பட 36 பேர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதில் உதயக்குமார் முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி மீரா 36வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர்கள் மீது 143 (தடையை மீறுதல்), 188 (அரசு உத்தரவை மீறுதல்), 157 (சாப்பாடு அல்லது பணம் கொடுப்பதாக கூறி மக்களை சேர்த்தல்), 291 (பொது இடத்தில் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்), 149 (சட்ட விரோதமாக கூட்டம் நடத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் விசாரணை வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 25ம் தேதி உதயக்குமாரின் மனைவி மீரா, நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் உதயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் மீராவை மீண்டும் நேற்று ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உதயக்குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் நேற்று நீதிமன்றத்தில் மீரா ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து, ஏற்று கொண்ட நீதிபதி, அடுத்த மாதம் 20ம் தேதி மீராவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
காவல் நீடிப்பு:
இந்த நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி கூடங்குளம் அணுஉலை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 39 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை வரும் 22ம் தேதி வரை நீட்டிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications