பாகிஸ்தான்: தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த பள்ளி மாணவி மீது தாலிபான் துப்பாக்கி சூடு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பள்ளி மாணவி தாலிபான் தீவிரவாதியால் துப்பாக்கியால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத செயல்பாடுகளை கண்டித்து பேசி வருபவர், மலலா யூசூப்சாய். 14 வயதான இந்த பள்ளி மாணவியின் சேவையை பாராட்டி, அந்நாட்டின் இளைஞர்களுக்கு வழங்கப்படும் அமைதிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமையன்று ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள தனது பள்ளியில் இருந்து பள்ளிப் பேருந்து மூலம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது, தலிபான் தீவிரவாதி ஒருவன் அந்த மாணவியை நோக்கி சுட்டான். நெற்றியில் சுடப்பட்ட அவள் மிக மோசமான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
பிறகு அங்கிருந்து விமானம் மூலம் பெஷாவர் கொண்டுசெல்லப்பட்டு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் வெளி நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அவளுக்கு சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் சுடுவோம்
தலிபான்களுக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் பேசியதற்காக அவள் சுடப்பட்டாள் என்று பாகிஸ்தான் டெக்ரி ஈ தலிபான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. எனது ரோல் மாடல் அமெரிக்க அதிபர் ஓபமா என்று கூறியுள்ள அவள், உயிர் பிழைத்தால், மீண்டும் அவள் சுடப்படுவாள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் இரண்டு மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications