கூடங்குளத்தை நிறுத்து... 29ம் தேதி கோட்டையை முற்றுகையிட தயாராகும் போராட்டக் குழு!
சென்னை: கூடங்குளம் போராட்டம் நடத்தியவர்களின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையை கண்டித்து வரும் 29ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் எம்எல்ஏ ஜவாஹிருல்லா நேற்று கூறியதாவது,
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தை மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதை தவிர்த்துவிட்டு, போலீசாரின் ஒடுக்குமுறை மூலம் அடக்க அரசு முயன்று வருகிறது.
இதை கண்டித்து இடிந்தகரையில் கடந்த மாதம் 27ம் தேதி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடுபவர்களின் மீது நடத்தப்படும் அடக்குமுறையை கண்டித்து வரும் 29ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
கூடங்குளம் அணுஉலை பாதுக்காப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய மற்றும் மாநில நிபுணர் குழுவினர், போராட்ட குழுவின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர். மேலும் தமிழக அரசின் மூலம் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 144 தடை உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் போராட்டக்காரர்களின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மக்கள் கோரிக்கையை ஏற்று அணுஉலையை மூட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை ஏற்காதபட்சத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதில் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ, திராவிடர் விடுதலை இயக்கம், தமிழர் வாழ்வுரிமை இயக்கம் ஆகிய கட்சிகள் பங்கேற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications