தீக்குளித்த காதல் கணவன் கமலஹாசன்.. கட்டிப்பிடித்து மனைவியும் பரிதாப மரணம்!
விழுப்புரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் காதலித்து மணந்த கணவர் தீக்குளித்து விட்டார். இதைப் பார்த்துப் பதறிப் போன மனைவி அவரைக் கட்டிப்பிடிக்கவே இருவரும் பரிதாபமாக தீயில் கருகி இறந்து போனார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கமலஹாசன். 34 வயதான இவரும் அதே ஊரை சேர்ந்த எத்திராஜ் மகள் மீராவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மோகனபிரியா, 1 வயதில் தீபலட்சுமி என இரு அழகான பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை மீராவின் தந்தை எத்திராஜுக்கு சாப்பாடு கொண்டு செல்லும்படி மீராவிடம் கமலஹாசன் கூறியுள்ளார். ஆனால் மீரா பகல் 1 மணிக்கு பிறகு சாப்பாடு கொண்டு சென்றுள்ளார். வேலைக்கு சென்று திரும்பிய கமலஹாசன், இது குறித்து மீராவிடம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில், என் பேச்சை நீ கேட்பதில்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடம்பில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்துப் பதறிப் போன மீரா, நீங்களே போகும்போது நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கேட்டு கதறியழுதபடி கமலஹாசனை கட்டிப்பிடித்துக் கொண்டார். சில நிமிடங்களில் இருவரும் தீயில் கருகினர்.
இருவரையும் சென்னைக்குக் கொண்டு வந்தனர். வழியில் மீராவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கமலஹாசனும் பரிதாபமாக இறந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications