திமுக நடத்தும் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை-முன்னாள் சென்னை மேயர் குற்றச்சாட்டு
ஈரோடு: திமுக நடத்தும் போட்டிகளில் பங்கு கொள்ள மாணவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், அண்ணாதுரையின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, பேச்சு, கவிதை ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளுக்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். முன்னாள் சென்னை மாநகராட்சி மேயரும், இளைஞரணியின் மாநில துணைச் செயலாளருமான சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது,
திமுக இளைஞரணி மாநில மாநாட்டில், ஆண்டுதோறும் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதேபோல திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு எஸ்.எஸ்.எல்.சி மற்றும் +2 தேர்வுகளில், மாவட்ட, மாநில அளவில் மதிப்பெண் பெறுவோருக்கு, பரிசுத் தொகை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஆண்டுத்தோறும் ரூ.30 முதல் 35 லட்சம் வரை நிதி செலவிடப்படுகிறது. இதுவரை ரூ.2.17 கோடி மதிப்பில் மாணவ, மாணவியருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, இன உணர்வு மாணவர்கள் ரத்தத்தில் கலந்திருக்க, இது போன்ற போட்டிகள் வழிவகுக்கும்.
திமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். கடந்த ஆட்சியில் சி.இ.ஓ., உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், மொழி உணர்வுகளை வளர்க்கும் இப்போட்டிகளுகக்கு ஆதரவளித்தனர்.
ஆனால் தற்போது சி.இ.ஓ, மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, திமுக நடத்தும் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவர்களை அனுமதிக்க கூடாது என்று எழுத்து பூர்வமாக உத்தரவிட்டுள்ளனர்.
இதை மீறி பள்ளி மாணவ, மாணவியர் திமுகவினர் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு நவம்பர் 3, 4ம் தேதிகளில், தஞ்சையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications