குற்றவாளிக்கு தூக்கு: துக்கம் கலந்த மௌனத்தில் முஸ்கான், ரித்திக் பெற்றோர்

கோவை, ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயினின் குழந்தைகள் முஸ்கான், ரித்திக். கடந்த 29.10.2010ல் கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' கொல்லப்பட்டான்.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு நேற்றைய தினம், நீதிபதி சுப்ரமணியன், ஒரு தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். ‘‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்கு பகல் கனவு கூட காணக்கூடாது. அவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகவே இந்த தண்டனையை அறிவிக்கிறேன், என்று கூறினார். இத்தீர்ப்பு குறித்து தான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என நீதிபதியைப் பார்த்து மனோகரன் கூறினார்.
பெற்றோர்களிடம் சலனமில்லை
குழந்தைகள் கொலை செய்யப்பட்ட பின்னர் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் அருகில் வசிப்பவர்கள் யாருடனும் பேசுவதில்லையாம். கொலைவழக்கில் சாட்சியம் சொல்வதற்காக கடந்த ஆண்டு பாட்டி கமலாபாய், அம்மா சங்கீதா, அப்பா ரஞ்சித் ஜெயின் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். ஆனால் தீர்ப்பு நாளான நேற்று அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை. எந்த கருத்தும் கூறவில்லை.
குவிந்த பத்திரிக்கையாளர்கள்
நீதிமன்ற தீர்ப்பு வந்த உடன் பெற்றோர் கருத்தறிய கோவையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் முஸ்கான், ரித்திக் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் முன் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தண்டனை அறிவிப்புக்கு பின்னர் முஸ்கான் வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களிடம் முஸ்கானின் பாட்டி கமலாபாய் மட்டும், ‘‘அந்த பாவிகள் குழந்தைகளை உயிரோடு விட்டிருந்தா சந்தோஷமாக இருந்திருப்போம். நாங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை,‘‘ எனக்கூறியுள்ளார்.
இனிப்பு வழங்கிய குழந்தைகள்
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என அறிந்ததும், இனி, பள்ளி குழந்தைகள் யாருக்கும், எவரும் குற்றம் இழைக்க நினைக்கக்கூடாது. அதுபோன்ற நபர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் எனக்கூறி கோர்ட்டில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் வக்கீல்களுக்கு சாக்லெட் கொடுத்து, தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications