மாப்ளே, தீபாவளிக்கு என்ன கிப்ட் குடுத்தாங்க?.. 'அல்வா தான்'!

மாப்ளே, தீபாவளிக்கு என்ன கிப்ட் குடுத்தாங்க?.. 'அல்வா தான்'!
இந்த ஆண்டும் சர்வதேச அளவிலான பொருளாதாரத் தேக்கம் தொடர்ந்து வருவதால் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பரிசுகள் தருவதற்காக ஒதுக்கும் நிதியை பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் 50 சதவீதம் வரை குறைத்துவிட்டன.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நடத்தியுள்ள சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

சென்னையிலும் சர்வே....
மருந்து உற்பத்தி, வங்கித்துறை, நிதித்துறை, இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல், ஹோட்டல்கள், எப்எம்ஜிசி எனப்படும் அதிக நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உற்பத்தித்துறை, பெட்ரோலியத்துறை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என சுமார் 150 நிறுவனங்களின் அதிகாரிகளிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது.
சென்னை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 10 நகர்களில் இந்த சர்வே நடந்தது.

5ல் ஒரு நிறுவனம் நோ...
இதில் 5ல் ஒரு நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளி கிப்ட் திட்டத்தையே அடியோடு நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளன.
வழக்கமாக தங்களது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனைக்கு உதவும் பிற நிறுவனங்களுக்கு தீபாவளி நேரத்தில் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் கிப்டுகளை வாரி வழங்கும்.

ரூ. 3,200 கோடி to ரூ. 2,400 கோடி...
கடந்த 2009ம் ஆண்டில் தீபாவளி பரிசுகளுக்காக இந்திய நிறுவனங்கள் செலவிட்ட தொகை சுமார் ரூ. 2,000 கோடியாகும். இது 2010ம் ஆண்டில் ரூ. 3,200 கோடியானது.
ஆனால், இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச அளவிலான பொருளாதாரத் தேக்கம் காரணமாக கடந்த 2011ம் ஆண்டில் தீபாவளி கிப்டுகளுக்காக இந்திய நிறுவனங்கள் செலவிட்ட தொகை ரூ. 2,400 கோடி மட்டுமே. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைவாகும்.

போனசிலும் 'கை வைக்கும்' நிறுவனங்கள்...
இந்த ஆண்டு இது மேலும் குறைந்து ரூ. 1,200 கோடியாகவே இருக்கும் என தொழில் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் குறைவாகும்.
மேலும் தீபாவளி போனசிலும் கூட கை வைக்கப் போவதாக பல நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
மேலும் பல நிறுவனங்கள் தங்களது கிப்டுகளை மாற்ற முடிவு செய்துள்ளன. வழக்கமாக டிஜிட்டல் கேமரா, வாட்சுகள், பேனாக்கள், பர்சுகள், டேப்லட் கம்ப்யூட்டர்களைத் தரும் நிறுவனங்கள் இந்த முறை சாக்லேட் டப்பாக்கள், உலர் பழங்களின் (dry fruits) பாக்கெட்டுகளை மட்டுமே தரப் போவதாகக் கூறியுள்ளன.

நன்றாகவே 'உலரும்' பழங்கள்!
வழக்கமாக தீபாவளி நேரத்தில் உலர் பழங்களின் விற்பனை மிக மிக அதிகமாக இருக்கும். இதையொட்டி விலையையும் வியாபாரிகள் 25 சதவீதம் வரை உயர்த்துவதும் வழக்கம். இந்த ஆண்டும் விலையை உயர்த்திவிட்டனர். ஆனால், வாங்கத்தான் ஆள் இல்லை. இவர்களின் வியாபாரம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை அடி வாங்கியுள்ளது.
இன்னும் கொஞ்சம் உலர வைத்து, அடுத்த ஆண்டு 'போணி' பண்ண வேண்டியது தான்!












Click it and Unblock the Notifications