நெல்லை கிறிஸ்தவ தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலய உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் மக்கள் காணிக்கை செலுத்த உண்டியல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆலயத்தில் வழிபாடு நடந்தது. பின்னர் பணியாளர்கள் ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை பணியாளர் ஒருவர் ஆலயத்திற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்னரசு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
கைரேகைப்பிரிவு, தடயவியல் நிபுணர்கள் ஆலயத்தில் ஆய்வு நடத்தினர். ஆலயத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை வசூல் எண்ணப்படும். கடந்த முறை 50 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது. இம்முறை காணிக்கை எண்ணப்படவிருந்த சூழ்நிலையில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
ஆலய பொறுப்பாளர் பீட்டர் தேவதாஸ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் பல்வேறு இடங்களில் பல லட்சம் ரூபாய் கொள்ளை போய் உள்ளது. இது அனைத்தும் மின்வெட்டை பயன்படுத்தியும், பல காவல் நிலையங்களில் போலீசார் இல்லாததை பயன்படுத்தியும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் நடக்கும் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications