அன்னிய முதலீடு- வாக்கெடுப்பு நடந்தால் மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டு: கருணாநிதி 'கசப்பான' முடிவு

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தால் மத்திய அரசை ஆதரிப்பது என்ற கசப்பான முடிவை மேற்கொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கவிழும் நிலையில் அரசு

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவினை தி.மு.கழகம் ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் கூட பாராளுமன்றத்தில் 184-வது விதியின்கீழ் இந்தப் பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகளின் கோரிக்கையைப் பொறுத்தவரை அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுமேயானால் இன்று மத்தியிலே உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை.

மதவாத பயங்கரங்கள் வந்துவிடும்..

அதன் விளைவுகளைச் சிந்திக்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, அதன் காரணமாக இமயம் முதல் குமரி வரை பெரும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. தலைவர்கள் நடத்திய கூட்டுச் சதி அம்பலமாகி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றெல்லாம் இல்லாத புகார்களைக் கற்பனையாகக் கூறி, மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பா..ஜ.க. போன்ற மதவாதக் கட்சிகளுக்குத் தான் ஆதாயம் என்ற நிலையை எண்ணிப் பார்க்கும்போது, மத்தியில் அதே பா.ஜ.க. வினுடைய ஆதிக்கமோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசோ ஆட்சிப் பொறுப்புக்கு வருமேயானால், இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் எண்ணிப் பார்த்து, அத்தகைய மதவாத அரசோ -ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்க வைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் மறந்து விடுவதற்கில்லை.

ஐமு அரசு நீடிக்க வேண்டிய அவசியம்

இதையெல்லாம் சிந்திக்கும்போது இந்தப் பிரச்சினையில் மத்திய ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம் என்பதையும் மறந்து விடுவதற்கில்லை. மாநிலங்களைப் பொறுத்தவரையில், மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக எடுத்த முடிவு கட்டாயப்படுத்தப் படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் சில்லரை வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் எத்தகைய இடைஞ்சலும் வராது என்ற நம்பிக்கை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்துள்ள ஒரு ஆட்சி நிலையான ஆட்சியாகவும், நிலைகுலையாத ஆட்சியாகவும் இருந்தால்தான், பொது அமைதியும், பொருளாதாரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி நிலையும், அவற்றின் காரணமாக மக்களின் நல்வாழ்வும் உறுதிப்படும்.

கசப்பான நிலையில் முடிவு

இவற்றையெல்லாம் யோசித்து, இந்தப் பிரச்சினைக்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது, அன்னிய முதலீடு பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இன்னமும் இருந்தாலும், உடனடியாக இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டால், அதன் காரணமாக ஏற்படக் கூடிய எதிர்மறை விளைவுகளை எண்ணிப் பார்த்து, கசப்பான நிலையில் இந்தப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தர முடிவு செய்கிறது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நிம்மதி

அன்னிய முதலீட்டு விவகாரத்தினால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியது. அதே நேரத்தில் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதனால் எப்படியாவது திமுகவின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டது.

இதனால் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் அடுத்தடுத்து கருணாநிதி நேரில் சந்தித்து பேசிவந்தனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தும் கருணாநிதியை ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸின் தொடர்ச்சியான அழுத்தங்களைத் தொடர்ந்து திமுக, தற்போது தமது நிலைப்பாட்டில் ஒரு குழப்பமான நிலையை அறிவித்திருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் பெரும் நிம்மதியாகவே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+