எப்.டி.ஐ: இன்று வாக்கெடுப்பு: மாயாவதி, முலாயம் ஆதரவு கிடைக்குமா?- காங்கிரசிலேயே எதிர்ப்பு

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவதாம் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. அவர்களின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் மீராகுமார் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் 4-12-12 மற்றும் 5-12-12 ஆகிய தேதிகளில் நடக்கும் என்றார்.
அதன்படி நேற்று பிற்பகல் லோக்சபாவில் அன்னிய நேரடி முதலீடு குறித்த விவாதம் துவங்கியது. விவாதத்தை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் துவக்கி வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். இதையடுத்து சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு மேல் நடக்கிறது.
'சஸ்பெண்ஸ்' முலாயம், மாயாவதி:
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் என்ன செய்யப் போகிறது, யாருக்கும் ஆதரவாக வாக்களிக்கப் போகிறது என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர். முன்னதாக நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முலாயம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது என்றார். இருப்பினும் அவர் தனது முடிவை உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
மாயாவதியோ இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாரா சிங் செளகான் லோக்சபாவில் பேசுகையில், நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். தீர்மானம் தொடர்பாக வாக்களிப்பது குறித்து நாளை (இன்று) முடிவு செய்வோம். மதவாதச் சக்திகளின் பக்கம் இருப்பதா, அவர்களுக்கு எதிராக இருப்பதா என்பது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறோம் என்றார்.
இவர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா அல்லது அந்த நேரத்தில் வெளிநடப்பு செய்வார்களா என்பது தெரியவில்லை.
எப்.டி.ஐ.க்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கப்படும்-மத்திய அரசு உறுதி:
இந் நிலையில் எப்டிஐக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுவது உறுதி என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் நிருபர்களிடம் பேசுகையில்,
எப்.டி.ஐ.க்கு எதிராக பாஜக, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கொண்டுவரும் தீர்மானம் தோற்கடிக்கப்படும். இந்த விவகாரத்தில், பா.ஜ.கவின் அரசியலுக்குத் துணைபோக வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
தீர்மானத்துக்கு சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவளிக்குமா? என்று கேட்கிறீர்கள். அன்னிய முதலீட்டை அக்கட்சிகள் எதிர்க்கலாம். ஆனால், அதை அனுமதிப்பதா, வேண்டாமா என்று இறுதி முடிவெடுக்கப் போவது மாநில அரசுகள்தான்.
இந்த விவகாரத்தில் பாஜக நடத்தும் அரசியலை அரசியல் கட்சிகள் உணர்ந்து கொள்ளும். தீர்மானம் வெற்றி பெறத் தேவையான எம்.பிக்கள் எங்களிடம் உள்ளனர் என்றார் கமல்நாத்.
தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிக்கள் போர்க்கொடி:
இந் நிலையில் எப்டிஐ மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும்போது தனது எம்.பிக்கள் அனைவரும் அதில் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டேவும், கமல்நாத்தும் நடத்திய இக்கூட்டத்தில், அக்கட்சியைச் சேர்ந்த தெலுங்கானா பகுதி எம்.பி.க்கள் 8 பேர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் எந்த முடிவையும் எடுக்காமல் மத்திய அரசு தாமதித்து வருவதை எதிர்த்து அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் வாக்கெடுப்பின்போது இவர்கள் என்ன செய்வார்களோ என்ற கவலையில் காங்கிரஸ் உள்ளது.












Click it and Unblock the Notifications