காஞ்சிபுரம் மாவட்ட வி.சி கட்சி துணை செயலாளர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளராக இருந்தவர் நாராயணன் என்கிற அம்பேத்கார் வளவன் (வயது 42). இவர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள எல்லப்பா நகரில் வசித்துவந்தார்.
அவர் அங்குள்ள இரட்டை மண்டபம் பகுதியில் நேற்றிரவு சிலருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று நாராயணனை முற்றுகையிட்டது. அவர் தப்பி ஓட முயற்சி செய்வதற்குள் அந்தக் கும்பல் கொண்டுவந்திருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை வெட்டிச்சாய்த்து விட்டு ஓடி விட்டது.
இதனால் பலத்த காயம் அடைந்த நாராயணன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார்.இதைப்பார்த்து சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாராயணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது நிலைமை மோசமானதால், அவரை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரது உடல்நிலை மோசமடைந்து மரணமடைந்தார்.
இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் முன் விரோதம் காரணமாக அந்த கும்பல் வெட்டிக்கொன்றதா? தொழில் போட்டி காரணமாக வெட்டிக்கொன்றதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications