சென்னை ‘ஆலிவ் பீச்’சில் விதி மீறி கட்டப்பட்ட நடிகையின் பங்களாவுக்கு சீல்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட நடிகை பங்களா உட்பட, ஏழு கட்டிடங்களுக்கு, நகரமைப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமையன்று "சீல்' வைத்தனர்.
மாமல்லபுரம் அருகில், கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் பகுதிகளை உள்ளடக்கிய, "ஆலிவ் பீச்' பகுதியில், ஏராளமான ஆடம்பர பங்களாக்கள் கட்டப்பட்டு வருகின்றன.கடற்கரை, நீர் நிலை புறம்போக்கு நிலங்களில், விதிமுறைகளை மீறி இந்த பங்களாக்கள் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. சினிமா துறையினர், தொழில் துறையினர் என, பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்காக, இந்த பங்களாக்கள் கட்டப்படுவதாக முட்டுக்காடு பகுதி மக்கள், நகரமைப்புத் துறையிலும், வருவாய் துறையினரிடமும் புகார் தெரிவித்தனர்.
இந்த புகார்கள் குறித்து, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள், திருப்போரூர் தாலுகா அலுவலக அதிகாரிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து விதிமீறிய பங்களாக்களின் உரிமையாளர்களுக்கு, நகரமைப்புத் துறை அதிகாரிகள் "நோட்டீஸ்' அனுப்பினர். அவற்றிர்க்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் பகுதிகளில் கட்டப்பட்டு வரும், ஏழு பங்களாக்களுக்கு, நகரமைப்புத் துறை அதிகாரிகள், சனிக்கிழமையன்று "சீல்' வைத்தனர். இதில், ஒரு பங்களா, பிரபல நடிகை ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில், விதிமீறல் கட்டடங்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த, நகரமைப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன்படி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, சேலம் போன்ற நகரங்களில், விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது, அந்தந்த பகுதி உள்ளூர் திட்டக் குழுமங்கள் மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
