சேலத்தில் பார்வையற்றோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
சேலம்: சேலத்தில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிற்பயிற்சி ஆசிரியர் நடராஜன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பங்களா தெருவில் உள்ளது அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளி. இந்த பள்ளி கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு 18 மாணவிகள் உள்பட 79 பேர் படிக்கின்றனர். அங்கு பணியாற்றும் 5 ஆசிரியர்களில் தொழிற்கல்வி ஆசிரியர் நடராஜனைத் தவிர மீதமுள்ள 4 பேரும் பார்வையிழந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் நடராஜன் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சைல்டு லைன் அமைப்பின் சார்பில் கடந்த மாதம் 14ம் தேதி இந்த விவகாரம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தேவகி நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அவர் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் மற்றும் பிற ஆசிரியர்களிடம் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. பின்னர் தனது அறிக்கையை சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் என்ற அமைப்பின் தலைவர் சேவியரிடம் சமர்பித்தார். இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டது. இம்முறை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 2012 பிரிவு 7, 9, 11, இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications